Sun. Oct 6th, 2024

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலர் ஜெய் பார்த்திபன் வேண்டுகோள்!

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை தகர்த்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் பேருந்து நிலையத்திற்காக புதிய வளாகம் கட்டப்போவதாக செய்திகள் அறிந்தேன். அதற்காக வேறு ஒரு இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தது. மிகவும் மகிழ்ச்சி!

அதற்கு தொடர்பான எனது கோரிக்கைகளும், வேண்டுகோளும் பின்வருவன…

1) புதிய பேருந்து நிலையத்தில் தற்போது உள்ள கட்டிடம் முழுமையாக பழுதடைந்துள்ளதா? அல்லது ஒருசில பகுதிகள் மட்டும் பழுதடைந்துள்ளதா?

ஆம் எனில், இதற்காக தொழில்நுட்ப பொறியாளர்களை (IIT, NIT வல்லுநர்கள்) அழைத்து வந்து பரிசோதனை செய்தீர்களா? அப்படி செய்திருந்தால் அவர்களின் அறிக்கை என்ன என்பது குறித்து செய்தி வெளியிட்டிருந்தீர்களா?

2) ஒருவேளை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டிடத்தை தகர்த்துவிட்டு அங்கே புதிதாக கட்டவேண்டும் என்று தீர்மானித்து இருந்தால்..

அதற்கு மிக அருகாமையில் யாருமே வசிக்காத, மிகவும் பழுதடைந்துள்ள மக்களை பலவகையில் அச்சுருத்திவரும் வீட்டுவசதி வாரியத்தின் பாலடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதலில் தகர்த்துவிட்டு அந்த இடத்திலேயே புதிய பேருந்து நிலைய கட்டடம் கட்டலாம்.

அதுவரையில், பழைய இடத்திலேயே பேருந்து நிலையம் இயங்கலாம். முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்த புதிய வளாகத்தில் பேருந்து நிலையம் இயங்கலாம்.

அதன்பிறகு தற்போது உள்ள பேருந்து நிலையத்தின் கட்டிடங்களை இடித்துவிட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யலாம்.

3) பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையினை வேறு பக்கத்திற்கு மாற்றிவிட்டு அங்கு புதிய பேருந்து நிலையத்திற்காக கட்டிடங்களை கட்டலாம்.

4) பூங்கா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இருந்து தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கலாம்.

இன்னும் பல அரசின் இடங்கள் தோதாக இருக்கும் சூழலில் அவ்வளவு தொலைவிற்கு இடம் மாற்றி பொதுமக்களை சிரமப்படுத்தாமல், மக்களின் நலன் கருதி மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு வழியில் யாருக்கும் எவ்விதத்திலும் பாதிப்பு நேராதபடி பேருந்து நிலையத்திற்கான புதிய கட்டுமானங்களை கட்ட வேண்டுகிறேன்.

எனவே, இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகமும் எனது கோரிக்கையினையும், வேண்டுகோளினையும் தக்கபடி பரிசீலனை செய்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுகிறேன்.

நன்றி!

குறிப்பு:
(கடந்த முறை தற்காலிக பேருந்து நிலையம் அமைத்த இடத்தில் மக்களுக்கு எவ்வித பயனுமின்றி மக்கள் பணம் சுமார் ரூபாய் 10கோடி வீணடிக்கப்பட்டு விரையமாக உள்ளது.)

வேண்டுகோளுடன்,
ஜெய் பார்த்தீபன்,
புதுக்கோட்டை.
அக்டோபர்-05-2023.

அமானுல்லா புதுக்கோட்டை