இளம்பெண்ணின் செல்போனுக்கு வந்த ஆபாச படம்… – லோன் ஆஃப் கும்பல் அட்டூழியம்!
திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கணவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், அப்பெண் குடும்ப செலவுக்காக ஆன்லைன் ஆஃப் மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ. 7 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கினார்.
இதன் பிறகு, கடந்த அக்டோபர் 2-ம் தேதி பெற்ற கடனுக்கான தவணை மற்றும் முழுத்தொகையினை கூகுள் பே மூலம் திரும்ப செலுத்தி இருக்கிறார்.
இதற்கிடையில், ஆன்லைன் செயலி நிறுவனத்திலிருந்து பேசுவதாக இப்பெண்ணுக்கு அழைப்பு வரவே, தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்திவிட்டதாக கூறியிருக்கிறார். அதோடு, அந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியதற்கான ரசீதை அனுப்பி இருக்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து அப்பெண் செல்போனிற்கு அந்த லோன் ஆஃப் கும்பல் புகைப்படம் ஒன்றை அனுப்பியது. அந்த புகைப்படத்தில் அப்பெண்ணை ஆபாசமாக சித்தரித்திருந்தது. இதைப் பார்த்த அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அப்பெண் உடனடியாக அந்த எண்ணிற்கு அழைத்தபோது கடன்வாங்கிய முழு தொகையையும் செலுத்தவில்லை என்றால், இந்தப் படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு மானத்தை வாங்கிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அப்பெண் திருச்சி மாநகர சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதற்குள் அந்தக் கும்பல் அப்பெண்ணை ஆபாசமாக சித்தரித்த படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிட்டது. இது தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்தக் கும்பலை தேடி வருகின்றனர்.