Fri. Dec 20th, 2024

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை- பெங்களூரு சாலையில் வாசன் சென்றுக்கொண்டிருந்தபோது, தனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த காரை முந்திச்சென்றதோடு அல்லாமல், காருக்கு முன் சாகசம் செய்ய முயற்சி செய்தார்.

அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் பயங்கரமாக மோதி விழுந்தது. இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு காயமடைந்தார். மருத்துவமனையில் வாசனுக்கு கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதன் பிறகு, வாசனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாசனின் பைக்கையும், லைசென்ஸ்யும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து, டிடிஎப் வாசன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு வந்தது.

இந்த மனு மீதான விசாரணையில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள பைக் வைத்துள்ளார். ரூ.3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்ததால் உயிர் தப்பியிருக்கிறார் என்று காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதி, நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும் என்றும், யூடியூப் சேனலை மூடி விட வேண்டும் என்று கூறி டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.