இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் – இறந்து விட்டதாக நினைத்த குடும்பத்திற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் சல்ஹான் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா (45), மனநலம் பாதிக்கப்பட்ட இந்தப் பெண் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அந்த சமயத்தில் தவறுதலாக தமிழ்நாட்டுக்கு வந்த ரயிலில் வழி மாறி வந்துள்ளார்.அவர் மீட்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மருத்துவர்கள்
உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருகை புரிகின்றனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்கு இயங்கி வரும் மனநல காப்பகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 59 நபர்களுக்கு சரிவர சிகிச்சை, உணவு, இருப்பிடம், சுகாதாரம் வழங்காததை கண்டு மருத்துவ சேவை வழங்கி வரும் ரெனேசன்ஸ் நிறுவனத்தின்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அன்னவாசலில் வைக்கப்பட்டிருந்த 59 பேரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதில் சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சல்மா குணமடைந்தும் மொழி பிரச்சனையால் தனது நிலையை விளக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
அப்போது புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு பயின்று வரும் ராஜஸ்தானை சேர்ந்த மாணவி பிரமிளா எதிர்பாராத விதமாக சல்மாவை சந்திக்க நேரிட்டுள்ளது.
அப்போது இருவரும் உரையாடியதில் சல்மா மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்போது சல்மா கொடுத்த தகவலின் படி மருத்துவ மனைவி பிரமிளா தனது ட்விட்டர் பக்கத்தில் இவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவை சல்மாவோடு பயின்ற நபர் ஒருவர் தொடர்பு கொண்டு மருத்துவ மாணவியுடன் பேசியுள்ளார். அவர் சல்மாவை வீடியோ கால் மூலம் அந்த நபருடன் பேச வைத்துள்ளார்.
இதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்த சல்மா தனது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை எடுத்து சல்மாவின் கணவர் ஜோகர் தத்வி (johar tadvi) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உரிய ஆவணத்தோடு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களின் ஆவணங்களை பரிசோதித்த மருத்துவர்கள் உரிய ஆவணங்கள் என சரி பார்த்த பின்பு சல்மாவை சந்திக்க அனுமதித்தனர்.
இரண்டரை ஆண்டுகளாக சல்மா உயிரோடு இல்லை என நினைத்துக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது கணவர் மற்றும் தனது இரண்டு மகன்களை கண்டதும் சல்மா மகன்களை கட்டி பிடித்து கதறி கண்ணீர் விட்டார்.
இதையடுத்து சல்மா அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார். குடும்பத்தினரும் சந்தோசமாக தங்களது ஊருக்கு சல்மாவை அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தனது ட்விட்டர் தளத்தில் சல்மாவின் வீடியோவை பதிவிட்டார். அதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அன்னவாசல் பகுதியில் மீட்டெடுக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சகோதரி சல்மா புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரின் உறவினர்களின் இருப்பு மருத்துவர்களின் முயற்சியால் கண்டறியப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி கொண்ட அவரின் கணவர்,மகன் உள்ளிட்ட உறவினர்கள் புதுக்கோட்டைக்கு விரைந்தோடி வந்து சகோதரி சல்மாவை சொந்த ஊருக்கு மகிழ்ச்சியோடு அழைத்து சென்றுள்ளனர் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராஜா மருத்துவ மாணவி பிரமிளாவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
சல்மா இறந்துவிட்டார் என குடும்பத்தினர் மனக்கவலையை இருந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் புதுக்கோட்டை மருத்துவர்களின் முயற்சியால் அனைவரும் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமானுல்லா புதுக்கோட்டை