Thu. Dec 19th, 2024

சென்னையில் அதிர்ச்சி – அதிமுக நிர்வாகி ஓடஓட வெட்டி கொடூரக் கொலை!

சென்னையில் அதிமுக பிரமுகரை மர்ம நபர்களால் ஓட, ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் விச்சூர் பகுதியை சேர்ந்தவர் சுமன் (38). இவர் அதிமுகவில் சோழவரம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி வைதேகி. இவர் விச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், விச்சூர் ஊராட்சி மேலவை பிரதிநிதியாகவும் பதவி வகித்து வருகிறார். சுமன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு சுமன் வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கோயில் திருவிழாவிற்காக பத்திரிகை எழுத வேண்டும் என்று கூறி அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

திருவிழா குறித்து விச்சூர் மேட்டு தெருவில் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மர்ம கும்பல் சுமனை சூழ்ந்து சராமரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து சுமன் தப்பித்து ஓடும்போது, விடாமல் துரத்தி அந்த மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டிச் சாய்த்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.