மேலைச் சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தூய்மையே சேவை 2023 வினாடி வினா பரிசளிப்பு விழா
இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கணேசர் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் பொன்னமராவதி பிரபஞ்சம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து தூய்மையே சேவை எனும் தலைப்பில் வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு விழா 29.09.23 அன்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். நேரு இளையோர் மைய மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் நேரு யுவ கேந்திரா எனும் அமைப்பு உலகின் மிகப் பெரிய மற்றும் தனித்துவமான இளையோர் மேம்பாட்டு அமைப்பாகும். இது தன்னார்வ, சுய உதவி மற்றும் சமூக பங்கேற்பு கொள்கையின் அடிப்படையில் இளையோரின் சக்தியை ஒருங்கிணைக்கிறது எனக் குறிப்பிட்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுக்கோட்டை தபால் துறை கண்காணிப்பாளர் முருகேசன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
மேலும் அவர் இந்திய அரசின் எனது மண் எனது தேசம் எனும் நிகழ்ச்சி குறித்து எடுத்துரைத்ததோடு பஞ்ச பிரான் எனும் ஐந்து தேச நலன் குறித்த உறுதிமொழியை வாசித்தார். நிகழ்ச்சியில்’ கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
தூய்மையே சேவை வினாடி வினாப் போட்டியில் கல்லூரி மாணாக்கர்கள் நந்தினி மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முதல் பரிகம், சுந்தரேசன் மற்றும் பாண்டிமீனாள் ஆகியோர் இரண்டாம் பரிசும், நாகஜோதி மற்றும் கலைவாணி ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் பொன்.கதிரேசன், ராமு, விண்மதி மற்றும் பிரபஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் நாராயணசாமி ராஜு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முனைவர் முடியரசன். முருகேசன் குறிஞ்சி மற்றும் பிருந்தா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக நேரு இளையோர் மைய தேசிய இளையோர் தொண்டர் மணிகண்டன் அனைவருக்கும் நன்றி கூறினார்.