நடிகர் சித்தார்த் ஒரு கலைஞன்.. அவரை ஏன் காவிரி விவகாரத்தில் இழுக்கிறீர்கள் – சீமான் ஆவேசம்!
நேற்று முன்தினம் பெங்களூருவில் ‘சித்தா’ பட நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, உள்ளே நுழைந்த ஒரு கர்நாடக அமைப்பினர், காவிரி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு தேவையா எனக் கூறி நடிகர் சித்தார்த்திடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து, நிகழ்விலிருந்து சித்தார்த் பாதியில் வெளியேறினார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த தமிழக மக்கள் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் கர்நாடக அமைப்பினர் மீது கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரி நீர் பிரச்சினையில் மட்டும் கர்நாடகாவில் இருக்கும் அனைவரும் ஒன்றாக எதிர்க்கிறார்கள். இது அரசியல் தலைவர்கள் பேசி தீர்வு காண வேண்டும், ஒரு கலைஞனிடம் கேட்பது நியாயம் கிடையாது.
நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தின் 2ம் பகுதி வெளியானது. அதற்கு தமிழகத்தில் யாரும் எதுவும் செய்யவில்லையே. வரவேற்றோமே… நடிகர் சித்தார்த் ஒரு கலைஞன். அவருக்கும் காவேரி பிரச்சினைக்கும் சம்பந்தம் கிடையாது. அவர் காவிரி தண்ணி கொடுங்க என்று கேட்கக்கூட இல்லை.
அந்த அரங்கத்துக்குள் போலீஸ் காரர்கள் இருந்தும் ஏன் ஒருவர் கூட ஏன் தடுக்கவில்லை. இதே தமிழகத்தில் நடந்திருந்தால் உடனே கைது செய்து பிரச்சனை வராமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த பண்பு கூட அந்த மாநிலத்தில் இல்லை. இதெல்லாம் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார்.