Fri. Dec 20th, 2024

காவிரி பிரச்சினை – இன்று தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் – சீமான் அறிவிப்பு

தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அடைந்து வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என இரு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது –

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம்தாழ்த்தி வரும் பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற திமுக அரசைக் கண்டித்தும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு சீமான் தெரிவித்துள்ளார். எனவே, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு களப்பணியாற்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இம்மாபெரும் போராட்டத்தினை பேரெழுச்சியாக நடத்த வேண்டும். தண்ணீர் தர மறுப்பது கர்நாடகத்தின் சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும். தமிழக முதல்வருக்கு இறுதிச்சடங்குகள் செய்து அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.