Fri. Dec 20th, 2024

திருத்தணியில் பெய்த கனமழையால் தனியார் திருமண மண்டபத்தில் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள்!

திருத்தணியில் பெய்த கனமழையால் தனியார் திருமண மண்டபத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா திருவலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில் இரவில் பெய்த மழையின் காரணமாக சரியான முறையில் பராமரிக்காத ஏரியிலிருந்து தண்ணீர் உபரி நீர் வெளியேறியது.

இதனால் இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்து தண்ணீரில் அரசு பள்ளி கட்டிடங்கள் தண்ணீரில் மூழ்கியது.

வகுப்பறைகள் உள்ளே மழை தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் இதில் படித்துக் கொண்டிருந்த 654 மாணவ மாணவிகள் அனைவருக்கும் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் இந்த பள்ளியில் காலாண்டு அரசு தேர்வு நடைபெற்று வருகிறது. ஆகையால் பள்ளிக்கு விடுமுறை விட முடியாமல் இந்த பள்ளியில் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கனகம்மா சத்திரம் காவல் நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் திருமண மண்டபத்தில் தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்த அரசு பள்ளியில் தொடர்ந்து மழை தண்ணீர் சூழ்ந்து வரும் சூழ்நிலையில் இதற்கான நிரந்தர தீர்வு காணாத காரணத்தினால் இன்று அதிக அளவு தண்ணீர் சூழ்ந்து கொண்டு பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் தேர்வு எழுத முடியாமல் தனியார் திருமண மண்டபத்தில் தேர்வு எழுத வைத்த கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியமே இதற்கு காரணம் என்று மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

பள்ளியில் இப்படி மாணவர்களுக்கு அவதியடையும் நிலை ஏற்பட்டும் பள்ளியில் மழை தண்ணீர் சூழ்ந்து கொண்ட பின்பும் வருவாய் துறை அதிகாரிகள் எட்டிக் கூட இந்த பள்ளியில் நிலைமை குறித்து எட்டிப் பார்க்கவில்லை என்று வட்டாட்சியர் மீதும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் மீதும் பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். உரிய நடவடிக்கைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர்
முருகன்