டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கினார்!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இம்முகாமில் கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
பேசுகையில், தமிழக முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் கல்வியில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வருகிறார்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்டம்தோறும் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமினை நடத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கான, மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது.
இம்முகாமில் தனியார் மற்றும் பொதுத்துறை சார்ந்த 22 வங்கிகள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலை கல்வி படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பயிற்சி கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் மாநில, ஒன்றிய அரசின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமில் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெறுவதற்கு தேவையான சான்றிதழ்களை பெற்றிட இ-சேவை மைய அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சேவை மையத்தில் மாணவ, மாணவிகளுக்கான இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்றத் திட்டங்களை மாணவ, மாணவிகள் அனைவரும் உரிய முறையில் பெற்று பயன்படுத்திக்கொண்டு, கல்வியில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.வள்ளியம்மை தங்கமணி, தமிழ்நாடு சிறப்புத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் ஜெ.வணங்காமுடி, ஸ்ரீ பாரதி கலைக் கல்லூரி இயக்குனர் முனைவர் குமுதா, கல்லூரி முதல்வர் கவிதா, ஸ்ரீ பாரதி மகளிர் கல்வி நிறுவன கௌரவ விரிவுரையாளர் முனைவர் மு.பாலசுப்பிரமணியன், கல்வி நிறுவனத் தலைவர் குரு.தனசேகரன், வட்டாட்சியர் விஸ்வநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
P.அமானுல்லா.
புதுக்கோட்டை