இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 1 வருடம் சிறைத்தண்டனை!
சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 1 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அசோக் நகரையடுத்த புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அதே பகுதி 3வது அவின்யூவில் பிளாட்பாரத்தில் “சிக்கன் பக்கோடா” கடை நடத்தி வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி இரவு இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த டைமண்ட் பாபு என்பவர் மது போதையில் எண்ணெய் சட்டியை எட்டி உதைத்து கடும் ரகளையில் ஈடுபட்டார். இதை தட்டிக் கேட்ட இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அப்பெண் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
குற்றம் உறுதியானதால் டைமண்ட பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஆபாசமாக பேசுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இறுதிகட்ட விசாரணையில், டைமண்ட் பாபுவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ10,500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.