காணாமல் போன 2 வயது குழந்தை – ஸ்பீக்கர் பாக்ஸில் பிணமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்!
கள்ளக்குறிச்சியில் காணாமல் போன 2 வயது சிறுவன் 3 நாட்கள் பிறகு ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 வயதில் திருமூர்த்தி குழந்தை உள்ளான். திருமூர்த்தி கடந்த 17 ம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் திருமூர்த்தி காணாமல் போனார். பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் அவனை தேடி கண்டுப்பிடிக்க முடியவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸிலிருந்து துர்நாற்றம் வரவே, சந்தேகப்பட்டு ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்தனர். அதில் காணாமல் போன திருமூர்த்தி சடலமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காணாமல் போன குழந்தை ஸ்பீக்கர் பாக்ஸில் பிணமாக கிடந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.