தமிழ் நடிகர் பாபு உயிரிழந்தார் – ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் பாபு நேற்றிரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் பாபு. இவர் நேற்றிரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
முதன்முதலாக தமிழில் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘என் உயிர் தோழன்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தால், மக்கள் பாபுவை ‘என் உயிர் தோழன்’ பாபு என்றே அழைத்தனர். இப்படத்தையடுத்து, நடிகர் பாபு ‘பெரும்புள்ளி’, ‘தாயம்மா’, ‘பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
மிக விரைவிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், தனது 5ம் படமான ‘மனசார வாழ்த்துங்களேன்’ படம் அவருடைய வாழ்க்கையையே திருப்பிப்போட்டது.
அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, மாடியிலிருந்து கதாநாயகன் குதிக்கும் காட்சியை படக்குழுவினர் படமாக்க திட்டமிட்டனர். அதற்காக படக்குழுவினர் ‘டூப்’ போட திட்டமிட்டனர். ஆனால், பாபு அந்த படக்காட்சியில் நானே நடிக்கப்போகிறேன் என்று கூறினார். அதற்கு படக்குழுவினர் வேண்டாம் என்று பாபுவிடம் எடுத்துக் கூறியும் மறுத்தனர். பலர் எவ்வளவோ கூறியும் பாபு காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்று கூறி மாடியிலிருந்து அவர் கீழே குதித்தார்.
ஆனால், எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பாபு தவறுதலாக வேறு இடத்தில் குதித்துவிட்டார். இந்த விபத்தில், அவருக்கு முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டது. இதனால், அவருடைய எலும்புகள் உடைந்து நொறுங்கியது.
முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தும் அது அவருக்கு பலன் கொடுக்கவில்லை. அவரை படுக்கையிலேயே கிடத்திவிட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக அவர் படுக்கையிலேயே கிடந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அவரை இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று நலம் விசாரித்தார். நடிகர் பாபுவைப் பார்த்து பாரதிராஜா தேம்பி அழுதார். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
கிட்டத்தட்ட 20 வருடங்களாக பாபுவை 80 வயதான தாயார் மட்டுமே அவரை உடனிருந்து கவனித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் பாபுவின் உடல் நிலை மோசமடைய, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிந்தார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த பாபுவின் மறைவிற்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.