Fri. Dec 20th, 2024

திருமண மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண் – உறவினர்களிடையே பயங்கர மோதல்!

கடலூரைச் சேர்ந்த 23 வயது கொண்ட வாலிபருக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதனால், இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்தனர்.

இதனையடுத்து, கடந்த 17ம் தேதி அன்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மணமேடையில் மணமக்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு விழாவில் உறவினர்கள், நண்பர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு ஆடல், பாடல் என அமர்க்களப்படுத்தினர்.

ஆனால், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு மணப்பெண் திடீரென்று மாயமானார். இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். மணப்பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணை செய்ததில், திருமணம் பிடிக்காததால் மணப்பெண், மண்டபத்திலிருந்து ஓடியது தெரியவந்தது.

இதனால், இருவீட்டு உறவினர்களுக்குள்ளும் மோதல் வெடித்தது. மண்டபத்தில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். உடனே பெரியவர்கள் தலையிட்டு இருவீட்டாரையும் சமாதானப்படுத்தினார்கள்.

இதனையடுத்து, திருமணத்திற்கு வந்த பெரியோர்களும், மணமகனின் பெற்றோர்களும், மணமகனுக்கு வேறு உறவினர் பெண்ணை பார்த்தனர். அப்போது, திருமணத்திற்கு வந்த உறவினர் பெண் ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வந்து குறித்த முகூர்த்த நேரத்தில் பெற்றோர்களும், பெரியோர்களும் திருமணத்தை நடத்தி முடித்தனர்.