Sun. Oct 6th, 2024

குடும்பத் தலைவிக்கு ரூ.1000 – நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் ஆன்லைனில் மேல் முறையீடு செய்யலாம்!

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், , தேர்வாகாத விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 15ம் தேதி, அண்ணா பிறந்த நாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனையத்து, தமிழகத்தில் ஒவ்வொரு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இத்திட்டம் அக்டோபர் மாதம் முதல் மாதம்தோறும் 1-ம் தேதியே மகளிர் உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற ஜூலை மாதம் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 2-வது கட்டமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

இந்த 2 கட்டங்களிலும் விண்ணப்பம் செய்யாமல் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 18 முதல் 20-ம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

இத்திட்டத்திற்கான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தகுதியற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்திற்கு ஏன் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என்பது குறித்து, குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு இன்று முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளன. குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு ஆன்லைன் வழியாக மட்டுமே செய்ய முடியும். மேலும், இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.