Sun. Oct 6th, 2024

1 கோடி பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

1 கோடி பெண்களுக்கு தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து திமுக பல அறிவிப்புகளை நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அப்பட்டியலில் இடம்பெறாமல் இருந்து வந்தது.

இதன் பிறகு 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி (இன்று) தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு விழா நடைபெறுகிறது. அங்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தை பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். நேற்றே தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்கில் ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. மேலும், நேற்றே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

ஆனால், அந்தப் பணத்தை உடனடியாக வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியாது. இன்றுதான் அப்பணத்தை எடுக்கலாம். மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.