பகல் கொள்ளை அடிக்கும் பிரைவேட் பார்கிங்..! – மனது வைப்பாரா மயிலாடுதுறை ஆட்சியர்?
தனி மாவட்டமாகி 2 ஆண்டுகள் கடந்த பின்பும், தனியார் சிலரின் பகல் கொள்ளையை மட்டும் தடுக்கவே முடியாத காரணத்தால் நகராட்சி நிர்வாகத்தின் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் மயிலாடுதுறை நகர்வாழ் மக்கள்.
மாவட்டத்தின் தலைநகரான மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் நின்று கொண்டு கையில் டோக்கன் போன்றதொரு துண்டுச் சீட்டை உற்றுப்பார்த்தபடி, “ஒட்டுப் போட்டதுக்கு ரோட்டுலதான் நிக்க வேண்டியிருக்கு…” என போனில் யாரிடமோ ஆவேசமாக பேசிக்கொண்டும், “சரி சரி, சீக்கிரம் எனக்கு நீ ‘ஜி பே’ அனுப்பு” எனக் கெஞ்சிக்கொண்டும் நின்றிருந்த அந்த 38 வயது நபரை ஆசுவாசப்படுத்தி விட்டு, “அப்படி என்னதாங்க உங்க பிரச்சனை..?” எனக் கேட்டோம். ஆரம்பத்தில் தயங்கிய அவர், பின்னர் செய்தியாளர் என்பதை தெரிந்து கொண்டு நம்மிடம் பேசத்துவங்கினார்.
“அட்டாக்கே வர்ற மாதிரி ஆகிடுச்சு..!”
“குத்தாலம் பக்கத்தில உள்ள வழுவூர் தான் சார் எனக்கு சொந்த ஊர். டிகிரி முடிச்சிருக்கேன். சரியான வேலை எதுவும் கிடைக்காததால பேங்க்ல லோன் போட்டு ஒரு குட்டி யானை (டாடா ஏஸ்) லோடு வண்டி வாங்கி கூலிக்கு ஓட்டி சம்பாதிக்கிறேன். திடீர்னு மனைவிக்கு உடம்புக்கு சரியில்லைனு மயிலாடுதுறை கூட்டிப்போக சொல்லிட்டாங்க. சரி, பஸ்சுக்கு வெயிட் பன்னுனா சரியா வராதேன்னு, வீட்டில் நின்றிருந்த குட்டி யானை வண்டியில கைக்குழந்தையோடு மனைவியை கூட்டிக்கிட்டு மயிலாடுதுறை வந்து ஆஸ்பத்திரியிலே சேர்த்தேன். அங்கே, வண்டி நிப்பாட்ட பாதுகாப்பான இடம் இல்லாததாலயும், ரோட்டுல நிப்பாட்டுனா போலீஸ் ஃபைன் போடும்னு சொன்னதாலயும் பக்கத்து சந்துக்குள்ள இருக்கிற பிரைவேட் பார்க்கில வண்டியை கொண்டு வந்து நிப்பாட்டினேங்க. வெட்ட வெளியிலதான் நிப்பாட்ட சொன்னாங்க. வண்டியை விடும் போதே, ‘எத்தனை நாளாகும்?னு கேட்டு, 200 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிட்டாங்க. ஆஸ்பத்திரி போற அவசரத்துல அதை கொடுத்துட்டு கிளம்பிட்டேன்.
1 வாரம் ட்ரீட்மென்ட் முடிஞ்சு இன்னைக்கு வண்டியை எடுக்க வந்தா, மேற்கொண்டு 920 ரூபாய் கேக்குறாங்க. என்ன ஏதுன்னு விபரம் கேட்டப்போதான், வெறும் 12 மணி நேரம் இங்கே வண்டியை நிப்பாட்ட இந்த வண்டிக்கு 80 ரூபாய் சார்ஜ் பண்றாங்களாம். 1 நாளைக்கி 160 ரூபாயாம். மனைவிக்கு மருத்துவம் பார்க்க வந்த எனக்கு அதைக்கேட்டதும் ஹார்ட் அட்டாக்கே வர்ற மாதிரி ஆகிடுச்சு. ‘காசை குடுத்துட்டு வண்டியை எடுத்துட்டுப் போன்னு’ மரியாதையே இல்லாம வேற பேசுறாங்க. இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்றது? நானும் இந்தியா முழுக்க லாரி ஓட்டியிருக்கேன். எந்த ஊருலயும், ஸ்டேட்டுலயும் இந்த மாதிரி பகல் கொள்ளையை பார்த்ததே கிடையாதுங்க..” என புலம்பித் தள்ளினார் அவர்.
“இஸ்டத்துக்கு கொள்ளை அடிக்கிறாங்க..”
உண்மை நிலவரம் தெரிந்து கொள்ள மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் பட்டமங்கல மேட்டுத்தெருவில் 10 அடி மட்டுமே அகலமுள்ள குறுகலான ஒரு சந்துக்குள் அமைந்திருக்கும் குறிப்பிட்ட அந்த M.A.H. வாகன காப்பகத்திற்கு அருகில் நின்று அங்கு வந்து செல்வோரிடமும் விசாரித்தோம். “அநியாயமாத்தான் சார் வசூல் பண்றாங்க. டூ வீலருக்கு 20 ரூபாய், காருக்கு 40 ரூபாய், கொஞ்சம் பெரிய வண்டிக்கு 80 ரூபாய், லாரியினா கொஞ்சம் ஜாஸ்தி. அதுவும் 12 மணி நேரத்துக்கு மட்டும்தான். ஆனால், 15 ரூபாய்க்குத்தான் ரசீது தருவாங்க. அதனால, தெரியாதவங்க யாராவது வண்டியை நிப்பாட்டினா சிரமம்தான். வண்டியை எடுக்கும் போது அந்த பில்லையும் சேர்த்து வாங்கிக்கிறாங்க. அதனால, யார் கிட்டேயும் கம்ப்ளைண்ட் பன்னவும் முடியாது. மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாகி கிட்டத்தட்ட மூனு வருசம் ஆகப்போகுது. ஆனால், நகராட்சி சார்பில் பஸ் ஸ்டான்ட் ஏரியாவுல பார்க்கிங் எதுவும் கிடையாது. ஆனாலும், என்னை மாதிரி டெய்லி வேலைக்கி போகிற நிறைய பேர் வேற வழியே இல்லாமல் இங்கே நிப்பாட்ட வேண்டியிருக்கு. அதனாலதான், இவங்க இஸ்டத்துக்கு கொள்ளை அடிக்கிறாங்க” என நொந்து கொண்டனர் அவர்கள்.
மாசாமாசம் ‘கட்டிங்’..!
அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் விசாரித்தோம். “கடந்த 2013ஆம் வருசம் மார்ச் மாசம் 13ஆம் தேதி அந்த தனியார் பார்க்கிங்கை இங்கே ஆரம்பிச்சாங்க. ஓனர் பேரு தஸ்வீர் அலி. இந்த பார்கிங்கிற்கு லைசன்ஸ் கிடையாதுன்னு சொல்றாங்க. அவரோட பெரிய மளிகைக் கடைக்காவது லைசன்ஸ் இருக்கானு தெரியலே. M.A.H. பார்கிங் இருக்கிற அந்த பகுதி ஒரு முட்டுச் சந்து. அந்த சந்துக்குள் நுழைந்தால் வெளியேற வழியும் கிடையாது. ஏதாவது சின்ன அசம்பாவிதம் நடந்தாலும் பெரிய பிரச்சனை ஆகிடும். காரணம், தினமும் நூறுக்கணக்கான பெட்ரோல் டீசல் வண்டிங்க உள்ளே நிக்கிது.
அப்படியிருக்கும் போது, இவ்வளவு சின்ன சந்துக்குள் இதுமாதிரி தனியார் பார்க்கிங் நடத்த நகராட்சியோ அல்லது மாவட்ட நிர்வாகமோ அனுமதிக்கலாமா? பக்கத்திலேயே லூர்துமாதா ஆஸ்பத்திரியும் இருக்கு. அதனால, அங்கே வருகிறவங்களுக்கும் இந்த தனியார் பார்கிங் காரணமாக தொல்லைதான். அடாவடி வசூல் வேற பண்றாங்க. அதுக்கெல்லாம் தொகை நிர்ணயிக்க வேண்டிய மயிலாடுதுறை நகராட்சியோ வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அதை எதிர்த்து நாம கேள்வி கேட்டாலும், ‘யாருகிட்டே வேணும்னாலும் போய் சொல்லுனு’ தெனாவட்டா பேசுவாங்க. எங்கே போய் கம்ப்ளைண்ட் பன்னினாலும் வேலைக்கும் ஆகாது. காரணம், போலீஸ்ல இருந்து நகராட்சி வரைக்கும் மாசாமாசம் ‘கட்டிங்’ கொடுக்கிறதா ஓப்பனாகவே சொல்லுறாங்க..” என வேதனையோடு தெரிவித்த அவர்கள், “ மூன்று மாதங்களுக்கு 93 ஆயிரத்தி 300க்கும் மேற்பட்ட வாகன ரசீது போட்டுள்ளார்கள். எந்த பில்டிங்கும் கட்டாமல் வெற்று இடத்தை மட்டும் ஒரு முட்டுச் சந்துக்குள் வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 13 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் என அடாவடி வசூல் பார்க்கிறது அந்த தனியார் வாகன காப்பகம். எனவே, பேருந்து நிலையத்திற்கு அருகில் அதுபோன்ற ஒரு பார்கிங் ஏரியாவை நகராட்சியே அமைத்தால் அந்த வருமானம் நகராட்சிக்காவது செல்லும்” என ஆலோசனையும் தெரிவித்தனர்.
என்ன சொல்கிறார் நகராட்சி ஆணையர்?
அடுத்தபடியாக, “பிரைவேட் பார்க்கிங் நடத்த M.A.H. வாகன காப்பகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?” என்ற கேள்வியோடு மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜியிடம் பேசினோம். “குறிப்பிட்ட அந்த தனியார் வாகன காப்பகத்திற்கு லைசன்ஸ் வழங்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை” என அதிர்ச்சியளித்த அவர், “பொதுவாக இதுபோன்ற வாகன காப்பகங்கள் நடத்த காவல்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் என பலரிடமிருந்தும் அனுமதி பெற வேண்டும். எனவே, அந்த தனியார் வாகன காப்பகத்திற்கு நானே நேரில் சென்று ஆய்வு செய்கிறேன். மேலும், தனியார் நிறுவனமாக இருப்பதால் அதிக தொகை வசூல் செய்வது குறித்து வருமான வரித்துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
என்ன சொல்லப் போகிறார் மாவட்ட ஆட்சியர்?
“சாதாரனமாக, 2 இட்லி சாப்பிட்டாலே ஜி.எஸ்.டி. அது இது என அப்பாவி மக்களிடம் வசூல் செய்யும் அரசாங்கம், எந்த லைசன்ஸும், பாதுகாப்பு வசதியும் இல்லாமல் கடந்த சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக பகல் கொள்ளையடிக்கும் இந்த தனியார் வாகன பாதுகாப்பு நிறுவனத்தை அனுமதிப்பது எப்படி?” என்ற பொதுமக்களின் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரான ஏ.பி.மகாபாரதி ஐ.ஏ.எஸ்.?