தங்கவயலுக்கு குறிவைக்கும் அதிமுக..! – பணியுமா பா.ஜ.க.?
‘நாங்க விடவே மாட்டோம்..’ என்கிற ரீதியில், “பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்” என அமீத்ஷாவும், ‘வந்தா வாங்க, வராட்டி போங்க’ என்ற மனநிலையில், “கூட்டணி குறித்து பா.ஜ.க. தலைவர்களே முடிவு செய்வார்கள்” என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணிக் குட்டையை குழப்பி வரும் நேரத்தில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றி வாய்ப்புள்ள 2 அல்லது 3 தொகுதிகளை கேட்டு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிமுக..!
பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலானது இம்மாதம் 13ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அங்குள்ள 224 தொகுதிகளுக்கும் மே – 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனால், ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீட்டெடுக்க காங்கிரஸும், ‘ஆட்சியை பிடித்தே தீறுவது’ என குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளமும் மும்முனை போட்டியில் இறங்கியுள்ளதால் கர்நாடகாவ்ன் அரசியல் களம் அனல் பறக்க துவங்கியுள்ளது. இந்நிலையில்தான், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அதே பாணியைப் பின்பற்றி கர்நாடகாவில் தமிழர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற காய்நகர்த்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
கர்நாடகாவை பொறுத்த வரை, பெங்களூரு சிட்டிக்கு உட்பட்ட சிவாஜி நகர் தொகுதியில் தமிழர்கள் 20% பேரும், சி.வி.ராமன்நகர் தொகுதியில் 10 % பேரும், மகாதேவபுரா தொகுதியில் 10% பேரும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 10% பேரும், கோலார் மாவட்டத்தில் உள்ள கேஜிஎஃப் தொகுதியில் 20% பேரும், மல்லூர் தொகுதியில் 10% பேரும், பங்காருபேட்டை தொகுதியில் 10% பேரும், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் தொகுதியில் 5 முதல் 8% பேரும் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆகமொத்தத்தில் கர்நாடகாவின் 5 சதவீத வாக்கு வங்கியை தங்களிடம் வைத்துள்ள தமிழர்கள், அங்குள்ள சுமார் 5 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகவும் விளங்கி வருகிறார்கள்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் 1983, 1989 மற்றும் 1999 தேர்தல்களில் காந்தி நகர், கோலார் தங்கவயல் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
எனவே, இந்த முறை நடபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து 2 அல்லது 3 தொகுதிகளில் களம் காண வேண்டுமென்ற தனது விருப்பத்தை கர்நாடக மாநில அதிமுகவின் துணைச் செயலாளர் குமார் தலைமையில் ஒரு குழு தமிழக அதிமுக துணை செயலாளர் கே.பி.முனுசாமியை சந்தித்து தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்திப்பார்கள் எனவும் கூறப்படும் நேரத்தில் இதுகுறித்து அதிமுக தலைமைக் கழக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம் நம்.
“கர்நாடகாவை பொறுத்த வரை இங்குள்ள 5-இல்1 பங்கு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் ஒரே சக்தியாக அதிமுக ஆதரவு நிலைப்பாடு கொண்ட தமிழர்கள் விளங்கி வருகிறார்கள். கே.ஜி.எஃப். எனப்படும் கோலார் தங்கவயல் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரான பக்தவச்சலம் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். எனவே, இந்தமுறை ஆளும் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்து தமிழர்கள் அதிகமுள்ள மற்றும் ஏற்கனவே வெற்றிவாய்ப்பை நிரூபித்துள்ள தொகுதிகளை கேட்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகவும் உள்ளது. ஒருவேளை கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால், யாருக்கு ஆதரவு தருவது என்பதை தலைமையே முடிவு செய்யும்” என்றார் அவர்.
அதேபோல, அதிமுக குறி வைக்கும் தொகுதிகளில் காந்தி நகர், கோலார் தங்கவயல் ஆகியவை தற்போது காங்கிரஸ் வசமுள்ளதால் அந்த இரு தொகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிவாய்ப்பை பெறுவதற்காக கடுமையாக களப்பணியாற்றி வரும் பா.ஜ.க.வானது அதிமுகவின் அந்த கோரிக்கைகளுக்கு இணங்குமா என்பது கேள்விக்குறியே எனக் கூறுகின்றனர் கர்நாடக பா.ஜ.க.வினர்.
தமிழகத்தை பொறுத்த வரை, வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடம் கூடணி அமைத்தால் மட்டுமே குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என பாரதிய ஜனதா கட்சி உறுதியாக நம்புகிறது. இந்த சூழலில், கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலுக்காக இன்னும் சில தினங்களில் பா.ஜ.க. தலைமை எடுக்கப்போதும் முடிவானது தமிழகத்திலும் பிரதிபலிக்கும் என்கின்றார் அரசியல் நோக்கர்கள்.