கேஸ் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்..! – அமைச்சர் சொன்ன “அடடே..” விளக்கம்
தமிழ்நாடு வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்த விவகாரம் அரசியல் தளங்களில் அலசப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் நிதியமைச்சரின் ‘அடடா..’ விளக்கம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் சூறாவளியாக சுற்ற துவங்கியுள்ளது.
இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்தில் நடந்த கட்சி விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிகளை முடுக்கி விடும் வகையில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவரின் வீட்டுச்சுவற்றில் ‘லைன் ஆர்ட்டாக’ வரையப்பட்டிருந்த தங்கள் கட்சிச்சின்னமான தாமரைக்கு ரோஸ் கலர் அடித்து பணிகளை துவக்கி வைத்தார். அதன் பிறகு, மத்திய இணையச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் புடைசூழ அந்த கிராமத்திற்குள் நடந்தவாரே மக்களை சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
“மோடி கவர்ன்மென்ட் எவ்வளவு நல்ல நல்ல விசயங்களை செஞ்சுக்கிட்டு இருக்குன்னு உங்க எல்லாத்துக்கும் நல்லா தெரியும். எல்லாத் துறைக்கும் நிறைய செய்ய வேண்டியிருக்கு. நாம பயன்படுத்துற வீட்டு சிலிண்டரில் கேஸை நிரப்பக்கூடிய தொழிற்சாலைகள் நம்ம நாட்டுல கிடையாது. அதனால, இப்போதைக்கு சமையல் கேஸை நாம வெளிநாட்டுல இருந்துதான் இறக்குமதி பன்னிக்கிட்டு இருக்கோம். ஏற்கனவே, மத்திய அரசு 600 ரூபாய் செலவு செஞ்சு, ‘நீங்க 600 ரூபா கொடுத்து வாங்கிக்கிங்க’ அப்படீனு மானியமெல்லம் கொடுத்துச்சு. அந்த அளவுக்கு விலையை குறைக்கனும்னா கவர்ன்மென்ட் கிட்டே நிறைய பணமும் இருக்கனும். ஆனா, நம்மகிட்டே அவ்வளவு பணம் இல்லை. நிறைய நல்ல திட்டங்களுக்காகவும் நாம செலவு செய்ய வேண்டியது இருக்கு. எனவேதான் சிலிண்டருக்கு கூடுதல் மானியம் வழங்க முடியவில்லை. அதனாலதான், வெளிநாட்டுல எப்போவெல்லாம் ரேட் ஏறுதோ அப்போவெல்லாம் நாமளும் விலையை கூட்ட வேண்டியிருக்கு. அங்கே விலை குறைந்தால், இங்கேயும் குறையும். ஆனா பாருங்க, கடந்த ரெண்டு வருசமா விலை குறையவே இல்லை..” என நீண்ட விளக்கம் அளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெட் ரோல் விலை உயர்வுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக சில விளக்கங்கள் வைரலான நிலையில், தற்போது சமையல் எரியாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு அவர் சொன்ன விளக்கமானது, “அடியாத்தி..!” லெவலுக்கு பெண்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.