Mon. Jul 8th, 2024

“நீங்கதாண்ணே சி.எம்..!” – ‘தட்டி விட்ட’ அண்ணாமலை; ‘டாப்’ கியரில் எடப்பாடி

அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சட்டரீதியாக எடப்பாடி பழனிச்சாமி செய்த முதல் வேலையே, தான் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்குமாறு அது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியதுதான். இதனால், சினிமாவில் கிளைமேக்ஸுக்கு முன்பாக சில ‘ட்விஸ்ட்கள்’ நடப்பது போன்ற காட்சிகள் அதிமுக – பா.ஜ.க வட்டாரங்களிலும் திருப்பங்கள் அரங்கேறத் துவங்கியிருப்பதை கூர்ந்து கவனிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அண்ணாமலை

கடந்த மாதம் பிஜேபியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்த நாளே அதிமுகவில், அதுவும் எடப்பாடியார் முன்னிலையில் இணைந்த சம்பவத்தால் தமிழக பா.ஜ.கவிற்கும் அதிமுகவிற்கும் அதுவரை இலைமறைவு, காய் மறைவாக இருந்த பனிப்போர் வெட்ட வெளிச்சமானது. “இதுதான் கூட்டணி தர்மமா.?” என்ற ரீதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சீறிப்பாய, “நீங்க மட்டும் என்ன ஒழுங்கா…?” என பா.ஜ.க.விற்கு பதிலடி கொடுத்தனர் அதிமுகவினர். இந்த சூழ்நிலையில்தான், ‘திராவிட கட்சிகளோடு இனி கூட்டணியே கிடையாது..’ எனக்கூறி அரசியல் களத்தை தெறிக்க விட்டார் அண்ணாமலை. இதனால், அதிமுக – ப.ஜ.க கூட்டணி தொடருமா, தொடராதா..? என்ற கேள்வி அந்த 2 கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் சுழன்றடித்த நேரத்தில்தான், சட்டரீதியாகவே ஓ.பி.எஸ்.சை ஓரங்கட்டி விட்டு அதிமுகவின் 8-வது பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி.

அதன் பிறகுதான் ட்விஸ்ட்கள் அரங்கேறின. பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலமாக அண்ணாமலை வாழ்த்து தெரிவித்த போது, “அண்ணே, பார்லிமெட்ல 40-க்கு 40-ஐயும் தூக்குறோம். அடுத்த எலக்சன்ல நீங்கதாண்ணே சி.எம்…’ எனத் ‘தட்டி விட’,  புலகாங்கிதம் அடைந்த எடப்பாடியாரும் மனம் விட்டு சில விசயங்களை பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்பு, ‘வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுடன் தான் எங்கள் கூட்டணி..’ என அமீத்ஷாவும் திருவாய் மலர, இதனால், அதிமுக – பா.ஜ.க கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக  நம்பத்துவங்கியுள்ளனர் பா.ஜ.கவினர். ஆனால், இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வாயே திறக்காமல் இருப்பதற்கு சில காராணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதை விட, தனித்து நின்றாலோ அல்லது ஒரு சில கட்சிகளை மட்டும் கூட்டணியில் இணைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தாலோ மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கருதும் அக்கட்சியின் 2-ஆம் கட்ட தலைவர்கள் சிலர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் அதையே வலியுறுத்த துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் இந்த வாரம் 7ஆம் தேதியன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டவிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான  எம்.ஜி.ஆர். மாளிகையில் அன்று மாலை 4.30 மணிக்கு கூடவிருக்கும் அந்தக் கூட்டத்தின் போது, உறுப்பினர் சேர்க்கை, வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் வெற்றி வியூகங்கள் என அலசி ஆராய முடியு செய்திருக்கும் எடப்பாடியார், பாஜகவுடன் கூட்டணி குறித்தும் தன் மனதில் உள்ளதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி கட்சி நிர்வாகிகளை ‘கன்வின்ஸ்’ செய்வார் எனக் கூறப்படுகிறது.

ஜே.பி. நட்டாவுடன் எல்.முருகன்

தற்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்த தகவல்களுக்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை விட, மத்திய அமைச்சர் எல்.முருகனையே டெல்லி தலைமை அதிகம் நம்புவதாக அக்கட்சியின் மேலிடத்துப் புள்ளிகள் சிலரே அரசல் புரசலாக கூறி வரும் நிலையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவை நேற்று எல்.முருகன் சந்தித்த விசயமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமீத்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சமி (File Photo)

ஆக மொத்தத்தில், :போட்றா டிக்கெட்டை டெல்லிக்கு…!” என எடப்பாடியார் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுகாக காத்திருக்கின்றனர் அவரது உதவியாளர்கள்!