Mon. Jul 8th, 2024

“நீங்க இந்த மாவட்டமா..?” – அப்போ எடுங்க குடையை..!

வறுத்தெடுக்கும் வெயிலால் வெறுத்துப் போயிருக்கும் மக்களுக்கு ஆறுதல் வார்த்தையை அள்ளித்தெளித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

எப்போதுமே மே மாத மத்தியில் துவங்கும் கத்தரி வெயிலைப் போல தமிழகமெங்கும் தாக்கத் துவங்கியுள்ள  வெப்ப அலைகளால் மக்கள் அதிகம் அவதிப்பட்டு வருகின்றனர். வேலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தும் வெயில் வாட்டத் துவங்கியுள்ளது. இந்நிலையில்தான்,  தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் மற்றும் இன்று 15 மாவட்டங்களுக்குக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

செந்தாமரைக் கண்ணன்

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், “இன்று (ஏப்ரல் 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 2 ஆம் தேதியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.