கொரோனா..! – இன்று முதல் புதிய கட்டுப்பாடு!
கடந்த சுமார் 3 ஆண்டுகளாக, ‘கோவிட் – 19’ என்ற பெயரில் உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ், ‘ஒமிக்ரான்’ என உருமாறி தற்போது, ‘XBB.1.16’ வைரஸ் என்னும் பெயரில் பரிணாம வளர்ச்சியடைந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவி தற்போது டெல்லி, பஞ்சாப், குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என பல மாநிலங்களிலும் தன் கைவரிசைகைக் காட்டி பொதுமக்களை அச்சுருத்தி வருகிறது.
இந்நிலையில்தான், ‘தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் இன்று முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது அரசு.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறுகையில், “இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் குறைவாக இருந்தாலும் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திட தீவிர கவனம் செலுத்தும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். பொதுவாக எந்த நோய் தொற்றாக இருந்தாலும் பெரும்பாலும் மருத்துவமனைகளில் இருந்தே பரவும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உள் நோயாளிகள் மருத்துவமனையின் அனைத்து நிலை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது’ என்றார்.
அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் முககவசம் அணிவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் முகப்புகளில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகங்களில் இருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனர் என்பதை உறுதி செய்யவும் சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்கள் முககவசம் அணிந்திருந்தனர்.
அதே நேரத்தில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,354 ஆக அதிகரித்து, நம் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்துள்ளது’ எனவும் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 876 ஆக உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.