8 புதிய மாவட்டங்கள்..!? – என்ன சொன்னார் அமைச்சர்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் – ஆம் தேதியான இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக கேள்வி நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், “திருவண்ணமாலை மாவட்டத்தில் இருந்து ஆரணி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதேபோல அரசு கொறடாவான கோவி செழியன், “கும்பகோணமானது மாவட்ட தலைமை மருத்துவமனை, நீதிமன்றங்கள், இரண்டு கல்லூரிகள், என அதிக வருவாய் கொண்ட பகுதி, மாநகராட்சியை மையமாக கொண்ட பகுதி. எனவே, டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம் தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும்” வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனையில் உள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மாவட்டம் என்ற கோரிக்கைக்கு நிதிநிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.