Mon. Jul 8th, 2024

வீதிவலம் வருகிறது திருவாரூர் ஆழித்தேர்..! – லட்சக்கணக்கானோர் கண்டுகளிப்பு

சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தளமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜ திருக்கோவிலின் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரானது ‘ஆரூரா.., தியாகேசா..’ கோசத்துடன் அழகாக வீதிவலம் வரும் காட்சியை இன்று லட்சக்கணக்கனோர் கண்டு களித்து வருகிறார்கள்.

எந்த ஒரு சிவ தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்ற திருவாரூர் தியாகராஜ திருக்கோவிலின் கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்களிலும் இடப் பெற்றுள்ளன. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதாகவும், சுந்தரர் அதனைக் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வரும் இதன் தேரோட்டத்தையொட்டி இந்தாண்டு பந்தல்கால் முகூர்த்தமானது பங்குனி உத்திர விழாவான கடந்த 5ம் தேதியன்று நடைபெற்றதையடுத்து கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சுவாமி புறப்பாடு நடந்து வந்தது. 1 மாதமாக ஆழித்தேர் உள்ளிட்ட 5 தேர்களுக்கும் தேர் சீலைகள் மற்றும் மரக்குதிரைகள், யாழி பொம்மைகள் உள்ளிட்டவை பொருத்தும் பணி நடைபெற்று வடங்கள் பொருத்தும் பணியும் முடிவுற்றது. மேலும் ஆழிதேரில் ஹைட்ராலிக் பிரேக் உரிய முறையில் இயங்குகிறதா என திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அடுத்து, ஆழித்தேருக்கான வடம் கட்டும் பணியில் இளைஞர்கள், கோயில் பணியாளர்கள் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். பக்தர்கள் கையில் இருந்து நழுவாத வகையிலும், பாதுகாப்பாக இழுக்கும் வகையிலும் வடத்தை தும்பு கயிறு மூலம் மூட்டினர். தேரின் முன் பகுதியில் நான்கு குதிரைகளும், யாழி, பிரம்மா உருவ பொம்மைகளும் கட்டப்பட்டு சுமார் 96 அடி உயரத்தில் 300 டன் எடை கொண்ட பிரம்மாண்டமானது இந்த தேர்.

சிறப்பு பூஜைகளுக்கு பிறகு இன்று காலை சுமார் 7.50க்கு தொடங்கிய தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர்  சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர்  வடம் பிடித்து இழுக்கத்துவங்கினர். ஆழித்தேரின் முன்பாக கொண்டு வந்து நிறுத்தப்பட்ட விநாயகர் தேர்,  முருகன் தேர்,  அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் தியாகராஜர் தேர் என மொத்தம்  5 தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டத்தை தேரோட்டத்தை பக்தர்கள் எளிதில் தரிசிக்கும் வகையில் மயிலாடுதுறை,    திருத்துறைப்பூண்டி,மன்னார்குடியில் இருந்தும் நீடாமங்கலம், நாகை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்தும் நேற்றிரவு முதலே திருவாரூக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றன. தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு, திருட்டு போன்றவற்றை தடுக்க கண்காணிப்பு பனியில் சாதாரண உடையில் நூற்றுக்கணக்கான போலீசாரும்,  அசம்பாவிதங்களை தவிர்க்க சுமார் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்ட திருவாரூர் ஆழித்தேர் வலம்வரும் அழகை தொலைக்காட்சி நேரலை மூலமாக லட்சக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர்.