Mon. Jul 8th, 2024

இந்த விசயத்தில் தமிழ்நாடுதான் டாப்..! – அதென்னெங்க புவிசார் குறியீடு..?

ஒரே நாளில் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருப்பதன் மூலம் நம்பர் – 1 இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. கடந்த 4 மாதமாக காத்திருப்பு பட்டியலில் இருந்த மணப்பாறை முருக்கு, மானாமதுரை மண்பாண்டம் உட்பட ஊட்டி வர்க்கி வரை தமிழ்நாட்டில் தயாராகும் மற்றும் உற்பத்தியாகும் பொருட்களுக்கு எப்படி கிடைத்தது இந்த அங்கீகாரம்?

சரி, புவிசார் குறியீடு என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாடு, நகரம், பகுதி போன்றவற்றுடன்  நேரடி தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு அல்லது அங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளமே புவிசார் குறியீடு என அழைக்கப்படும். ஆங்கிலத்தில், Geographical Indication (GI) என அழைக்கப்படும் அந்த புவிசார் குறியீடுகளைப் பெற்ற அந்த குறிப்பிட்ட அந்த உணவுப் பொருளோ, தயாரிப்போ அல்லது விவசாய உற்பத்தியோ பாரம்பரிய முறைகளின்படி தயாரிக்கப்படுகிறது,  சில குறிப்பிட்ட குணங்களைக் கொண்டுள்ளது அல்லது அதன் புவியியல் தோற்றம் காரணமாக ஒரு குறிப்பிட்ட நற்பெயரைக் கொண்டுள்ளது என்பதற்கான அங்கீகாரமே இந்த புவிசார் குறியீடு. மேலும், குறிப்பிட்ட அந்த பொருளின் பெயரை குறிப்பிட்ட மாத்திரத்தில் அந்த பொருளின் தயாரிப்பு குறித்து எளிதாக அறிந்து கொள்ளவும் இந்த புவிசார் குறியீடானது பயன்படுத்தப்படுகிறது.

புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ள குறிப்பிட்ட அந்த பொருட்களின் பெயரை அதன் பதிவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சர்வதேச அங்கீகாரமும் அதற்கு உண்டு என்பதை உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவை பொறுத்த வரை, ‘புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், -1999’ மூலம் நிர்வகிக்கப்படும் நடைமுறையானது கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் முதல் நடைமுறையில் உள்ளது என்பதும், இந்தியாவிலேயே முதன் முறையாக மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங்கில் தயாராகும் தேனீருக்கு கடந்த 2004 –05ஆம் ஆண்டுக்கான புவிசார் குறியீடு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை பொருத்தவரை ஏற்கனவே, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் பொம்மை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்பட 45 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள நிலையில்தான் தற்போது மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டுமோ அந்த பொருட்கள் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்த பிறகே, அந்த ஆவணங்களோடு புவிசார் குறியீட்டுக்காக அவை விண்ணப்பிக்கப் படுகின்றன.அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார்குறியீடு பொருட்களைப் பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி என்பவர் மூலம் தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள 11 பொருட்களில் 10 பொருட்கள் கடந்த 2021 நவம்பர் மாதம் விண்ணப்பிக்கப் பட்டன. அதில், ஏதேனும் ஆட்சேபனைகள் வருகிறதா என 4 மாத காத்திருத்தலுக்குப் பிறகு இன்று அந்த 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது. இதனால், புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றுள்ளது தமிழ்நாடு. 2-ஆம் இடத்தில் கர்நாடகாவும், 3-ஆம் இடத்தில் உத்தரப்பிரதேசமும் உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேளாண் பட்ஜெட்டின் போது, ‘பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு கிடைக்க விண்ணப்பிக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.