“தேர்தல் ஆணையத்துக்கும் சொல்லியாச்சு..!” – படுகுஷியில் எடப்பாடி தரப்பு
அதிமுகவின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருந்த அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கிடையே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தலைதூக்கிய ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவை மட்டுமே சந்தித்து வந்தார் ஓ.பி.எஸ். ‘தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்’ எனக்கூறி வந்தாலும் கூட, ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் கட்டிப்போட்டது போல தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொண்டர்களை விட நீதிமன்றத்தையே அதிகம் நம்பியிருந்தார் ஓ.பி.எஸ்.
ஆனால், நீதிமன்றத்திலும் தோல்விகளே தொடர்கதையான நிலையில் தேர்தல் ஆணையத்தை பெரிதும் நம்பியிருந்தார் ஓ.பி.எஸ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடியார் தரப்பு நாள் குறித்த பின்னரும் கூட, அதுவரை தன்னை ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் தனது இணையதளத்தில் தெரிவித்து வந்த தேர்தல் ஆணையத்தை கடிதம் மூலம் அனுகினார் ஓ.பி.எஸ். அரசியல் கட்சிகளின் அங்கீகார நடைமுறையை செயல்படுத்துவது இந்திய தேர்தல் ஆணையம் என்பதால்தான், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்துள்ள பொதுச்செயலாளருக்கான தேர்தலை சட்ட விரோதமானது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார் ஓ.பி.எஸ்.
ஆனால், அதற்கான பதிலை தேர்தல் ஆணையம் தெரிவிப்பதற்கு முன்பாகவே ‘பொதுக்குழு செல்லும்’ எனக் கூறிய நீதிமன்ற தீர்ப்பு வெளியான அடுத்த அரை மணி நேரத்திலேயே போட்டியாளர் யாருமின்றி அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அதிமுகவின் தேர்தல் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்த கையோடு வெற்றிச்சான்றிதழையும் அவரிடம் வழங்கினார்கள்.
இந்நிலையில்தான், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழக்கறி ஞர்கள் குழுவின் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.
இதையடுத்து, இன்னும் சில தினங்களில் ‘அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி’ என தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பூர்வாங்க வேலைகளில் பிஸியாகியுள்ளது எடப்பாடியார் தரப்பு.