Sun. Oct 6th, 2024

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊரில் நடந்த கும்பாபிஷேகம்!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் பிறந்த ஊர் காணக்கிளியநல்லூர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள இந்த ஊரில் எல்லையம்மன்,ரேணுகாதேவி, ஜமதக்னி, பாப்பாத்தி அம்மன் மற்றும் காலபைரவர் கோவில் உள்ளது. சமீபத்தில், சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் செய்து கருங்கல்லால்  கர்ப கிரஹம், அர்த்த மண்டபம் பரிவார ஆலயங்கள் மஹா மண்டபம் முதலியவை புதிதாக அமைத்து விமானங்கள் எழுப்பி அழகிய சுதை சிற்பங்கள் வண்ணம் தீட்டி அழகு மிளிர புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (24.03.2023) வெள்ளிக்கிழமை அக்கோவிலின் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதற்கு முன்னதாக, கடந்த 21ம் தேதி காலை 8 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று வியாழக்கிழமை 2 மற்றும் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

சரியாக 9.15 மணிக்கு மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் மூலம் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு சரியாக 9.30 மணிக்கு கலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அய்யாவாடி சர்வ சாதகர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமை தாங்கினார்இந்த கோவில் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் காணக்கிளியநல்லூர் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், அமைச்சர் நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் தொழிலதிபர் கே.என். அருண் நேரு மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்டோரும் காணக்கிளியநல்லூர்,  பெருவளப்பூர், ரெட்டிமாங்குடி, கண்ணாக்குடி, விடுதலைபுரம், புள்ளம்பாடி, லால்குடி, டால்மியாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.