சிறப்பாக நடந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம்!

தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி,திருவெண்ணெய்நல்லூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி உட்பட 50-இக்கும் மேற்பட்ட இடங்களில் இதன் கிளை மடங்களும், அதன் கட்டுப்பாட்டில் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 75 கோவில்களும் உள்ளன.
இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில், திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த நிலையில் இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாகிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று (24.03.2023) வெகு விமரிசையாக நடைபெற்றது.

மாயூரநாதர் திருக்கோயில்
இந்த கும்பாபிஷேக விழா கடந்த 19ஆம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 21ஆம் தேதி அன்று யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், மயிலாடுதுறை காவிரிக் கரையில் காவிரி அம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, வெள்ளிக் குடங்களில் புனித நீரை நிரப்பி, அதனை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை, திருக்கடையூர் கோயில் அபிராமி யானை, திருவையாறு கோயில் தர்மாம்பாள் யானை ஆகியவற்றின் மீது ஏற்றி ஊர்வலமாக மயூரநாதர் கோயிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது 10க்கும் மேற்பட்ட மல்லாரி மேளக்கச்சேரி உடன் ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல, 100க்கும் மேற்பட்ட வேத சிவாகம பாடசாலை சிறுவர்கள் தேவாரப் பாடல்கள் பாடியே பின் தொடர, ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் பங்கேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், மலர் தூவி புனித கடங்களை கால பூஜையில் வைத்து யாகசாலை பூஜை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.இந்த நிலையில் இன்று காலை 6ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் ஆகிய ஆதீனங்களின் குரு மகா சன்னிதானங்கள் மற்றும் திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு, திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் ஆகியோர் முன்னிலையில் மகா பூர்ணாஹூதி செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.