Thu. Dec 19th, 2024

இப்படி செய்தால் ராகுல் மீண்டும் எம்.பி.யாக தொடரலாம்! – எக்ஸ். ‘லா மினிஸ்டர்’ கபில் சிபல்

கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, அதே ஆண்டு  கர்னாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு பேசிய போது மோடி என்ற வார்த்தை குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக் கருத்தை கூறியிருந்தார். இது குறித்து குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புர்னேஷ் மோடி என்பவர் தொடுத்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய கோலார் செசன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

இச்சம்பவம் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் மத்தியில் ஆளும் பிஜேபியை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்தன. இந்நிலையில்தான், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழப்பதாக அறிவித்துள்ளது மக்களவை செயலகம்.

இந்த அறிவிப்பானது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையேயும் பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  ‘தனது எம்.பி.பதவியை இழந்துள்ள ராகுல் காந்தி இனி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது’ என கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞரும் முன்னால் மத்திய சட்டத்துறை அமைச்சருமான கபில் சிபல், இனி என்ன செய்தால் அவர் மீண்டும் எம்.பி.யாக தொடரலாம் எனவும் கூறியுள்ளார்.

கபில் சிபல்

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு – 1 இன் படி 2 ஆண்டுகளுக்கு குறையாத தண்டனை பெற்ற ஒருவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினத்திலிருந்து 6 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது” எனக் கூறியுள்ள அவர், “கோலார் செசன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதித்துள்ள இந்த தண்டனைக்கு உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ தடைவிதிக்கும் பட்சத்தில் ராகுல்காந்தி மறுபடியும் எம்.பி.யாக தொடரலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞரின் இந்த ஆலோசனை கருத்தின்படி மேல் முறையீட்டுக்கு தயாராகி வருகிறது காங்கிரஸ் கட்சி.