“கவர்னர் கையெழுத்து போட்டுதாங்க ஆகனும்..!” – ஆன்லைன் ரம்மி விவகாரம்
‘ரம்மி’ எனப்படும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அந்த மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி ஆனந்த், சென்னை தாம்பரத்தில் வினோத். மெரினாவில் சுரேஷ், போரூரில் பிரபு, மணலியில் விக்னேஷ் மற்றும் பவானி, செங்குன்றத்தில் தினேஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன், தருமபுரி வெங்கடேஷ், நெல்லை பணகுடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சிவன்ராஜ், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பிரகாஷ், கோவை வெள்ளலூரைச் சேர்ந்த மதன்குமார் என்று நீண்டு கொண்டே சென்று இறுதியாக இம்மாதம் 4 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி வினோத்குமார் என இதுவரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 47-ஐ தாண்டி விட்டது.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவானது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டு இருந்தார். அதற்கு சட்டத்துறையில் இருந்து தேவையான விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரும், ‘அந்த விளக்கங்கள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை’ எனவும், ‘அது தேசியம் தழுவிய ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும், சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போதிய அதிகாரம் இல்லை’ என்றும் கூறி, தமிழக அரசு அனுப்பிய அந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கடந்த 6-ந்தேதியன்று தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்.
ஆளுநரின் இந்த செயலானது அரசியலையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு தமிழக சட்டசபையில் நேற்று (23.03.2023) நிறைவேற்றப்பட்ட 8 பக்கங்கள் கொண்ட அந்த மசோதாவானது சட்டத்துறை அதிகாரிகள் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை மீண்டும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், ‘இதனை ஆளுநர் ஏற்பாரா அல்லது மறுபடியும் திருப்பி அனுப்புவாரா?’ என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ள நிலையில், இது பற்றி சட்டத்துறை நிபுனர்கள் சிலரிடம் பேசினோம் நாம்.
“அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப்பட்டியலின் 34-வது பிரிவில் இது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. தவிர, கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க எம்.பி பார்த்திபன் இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பிய போது அவருக்கு பதிலளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூரும் கூட, ‘பந்தயம், சூதாட்டம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்கீழ் வருகின்றன. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களைத் தங்களின் வரம்புக்குள் கொண்டு வருவதற்கும், அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு’ என்று கூறியிருந்தார். இதையெல்லாம் விட, ஒரே மசோதாவானது 2-வது முறையாக ஆளுநருக்கு அனுப்பப்படும் போது அதற்கு அவர் ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியும் கிடையாது. ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக ஆளுநர் தமது முடிவை தாமதப்படுத்த வேண்டுமானால் செய்யலாம்” என தெளிவாக்க் கூறினார்கள்.
ஆசை வார்த்தை கூறி, டிஜிட்டல் மூளையில் தந்திரத்தால் அப்பாவிகளிடமிருந்து லட்சங்களை விளையாட்டாக கொள்ளையடிக்கும் இந்த ஆன் லைன் சூத்தாட்ட தடை மசோதாவானது உயிர்பெறும் பட்சத்தில் இந்தியாவிற்கே முன்னோடி உதாரனமாக தமிழ்நாடு விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.