Thu. Dec 19th, 2024

“ஓஹோ.., சசிகலா ஐடியா இதுதானா..?” – ஆரூடம் சொல்லும் அரசியல் பார்வையாளர்கள்

சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அங்கிருந்த கட்சித்தலைவர்கள் பலரும் தடைச்சட்டத்திற்கு ஆதரவாக பேசினர். அதேபோல,  ‘முதலமைச்சர் கொண்டுவந்த ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அதிமுக சார்பாக முழுமையாக வரவேற்பதாக’ பேசினார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், ‘அதிமுக சார்பாக’ என பேசிய ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அதிமுகவின் எடப்பாடி ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் கண்டனக்குரல் எழுப்பினர்.

அப்போது, எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ. கோவிந்தசாமிக்கும்,  ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென இருக்கையிலிருந்து எழுந்த மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டியவாறு எடப்பாடி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ-க்களை நோக்கி சென்றார். உடனே ஓ.பன்னீர்செல்லம் அவர் கையை பிடித்து இழுத்து தடுத்தார். இதனால் சட்டசபையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர்.

வாக்குவாதம் செய்யும் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள்

இந்நிலையில் திருவாரூரில் நேற்று நடைபெற்ற உறவினரின் இல்ல நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த சசிகலா,  நாகை மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு செல்லும் வழியில் வேளாங்கண்ணியில் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது, ‘தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்? என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,  “தொண்டர்களிடம் தான் இதற்கான இதற்கான பதிலை எதிர்பார்க்க வேண்டும்” என்றதோடு,  “சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது. இப்படி சொல்வதால், பன்னீர் செல்வத்தை நான் ஆதரிக்கிறேன் என்றோ எடப்பாடியை எதிர்க்கிறேன் என்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது. ஓ.பி.எஸ். என்னை நேரில் வந்து சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது” என்றார்.

செய்தியாளர்களிடம் பேசும் சசிகலா..

‘அதிமுக யார் வசம் சென்றால் நல்லது?’ என்ற கேள்விக்கும் தொண்டர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி என அவர் கூறியதும், இதுவரை டிடிவி தினகரனுக்க்குக்கூட வாய் திறந்து ஆதரவு தெரிவிக்காத சசிகலா, ‘கண்டிப்பாக எல்லோரும் ஒருங்கிணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்’ என்று கூறியிருப்பதாலும், சசிகலாவின் ஆதரவு நிலைப்பாடு ஓ.பி.எஸ். பக்கம் இருப்பதை உறுதி செய்யும் அரசியல் பார்வையாளர்கள், ‘ஒருவேளை, ஓ.பி.எஸ். தனிக்கட்சி துவக்கினால் டிடிவி தினகரனின் அமமுக, ஓ.பி.எஸ்.சின் புதுக்கட்சி ஆகியவற்றை பிஜேபி கூட்டணி சேர்க்கவும், பி.ஜே.பி.யின் இந்த கூட்டணியானது எடப்பாடி தலைமையிலான அதிமுகவோடு தேர்தல் கூட்டணி அமைக்கலாம் எனவும் ஆரூடம் கூறுகின்றனர்.

பலே..பலே..!