Sun. Oct 6th, 2024

ராகுலுக்கு சிறை தண்டனை..! – கொந்தளிக்கும் காங்கிரஸ்; கை கொடுக்கும் தலைவர்கள்

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று கர்னாடக மாநிலம் கோலார் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்ற ராகும் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?” என பேசியிருந்தார். அவரின் அந்த வார்த்தையானது மோடி சமூகத்தையே இழிவுபடுத்துவதாக உள்ளதாகக் கூறி குஜராத்தைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ.வும் எக்ஸ் மினிஸ்டருமான புர்னேஷ் மோடி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

2021-ல் சூரத் நீதிமன்றத்திற்கு வந்த ராகுல் (FILE PHOTO)

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500 கீழ் தொடரப்பட்ட அந்த அவதூறு வழக்கின் விசாணைக்காக கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார் ராகுல்காந்தி. இந்நிலையில்தான், இன்று தீர்ப்பு வழங்குவதாக கூறியிருந்த அவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த சூரத் மாவட்ட சீஃப் ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட் எச்.எச்.வர்மா, ரூபாய் 10 ஆயிரம் பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தீர்ப்பளித்தார்.

ராகுல் மற்றும் பிரியங்காவின் அந்த ட்வீட்கள்

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளிதுமளிப்படவே நாள் முழுக்க அவை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், “உண்மை மற்றும் அஹிம்சையை அடிப்படையாக கொண்டது எனது மதம். சத்தியமே என் கடவுள் அதை அடைய அஹிம்சையே ஒரே வழி” என்ற காந்தியின் கருத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ராகுல் காந்தி. தனது சகோரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து தெரிவித்திருந்த அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, “பயந்து போன அனைத்து அரசு எந்திரங்கள் அனைத்துமே தண்டனை,  பாரபட்சம் போன்றவற்றை திணிப்பதன் மூலம் ராகுலின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான். அவன் உண்மையைப் பேசி வாழ்பவன். தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவான். அவன் தொடர்ந்து இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பான். உண்மையின் சக்தியும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்பும் ராகும் காந்தியோடு இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் – மு.க.ஸ்டாலின்

மேலும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனைக்கு எதிராக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் அரங்கிருந்தும் ஆளும் பா.ஜ.க.விற்கும், மோடிக்கும் எதிரான கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்பி ஜெய்ராம் ரமேஷ், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சதா, சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் த்ங்கள் கண்டனக் குரல்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், ‘கலங்க வேண்டாம். திமுக என்றென்றும் தங்களுக்கு ஆதரவாக துணை நிற்கும்’ என்று ஆறுதல் கூறியிருந்தார்.

ரயில் மற்றும் சாலை மறியல்…

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதுமே கண்டன ஆர்ப்பாட்டங்களும் வலுத்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் கோபண்ணா தலைமையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு கூடிய காங்கியரஸ் பிரமுகர்கள் பா.ஜ.க.விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். அதே போல, தலைமைச் செயலக வாயில், அண்ணா சாலை உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சாலைமறியல், ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை அண்ணா சாலையில் மோடியின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.