Thu. Dec 19th, 2024

“சி.வி.சண்முகம் ரொம்ப ‘சேஃப்டியா’ இருக்காரு..!” – தமிழ்நாடு காவல்துறை

அதிமுக எம்.பி.சி.வி. சண்முகத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் இலாத காரணத்தால் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2006  சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவைச் சேர்ந்த முன்னால் அமைச்சரும்  தற்போதைய எம்.பி.யுமான சி.வி.சண்முகத்தின் வீட்டுக்குள் நுழைந்த மர்மக் கும்பல் ஒன்று  பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது. இதில் சி.வி.சண்முகம் காரின் கீழ் படுத்துத் தப்பிவிட, அவரின் மைத்துனர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் சி.வி.சண்முகத்திற்கும் அவரது வீட்டிற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.



அந்த பாதுகாப்பானது, கடந்த 2021 ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் அந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக்க் கூறி, மீண்டும் பாதுகாப்பு கோரி கடந்த 2022 ஜனவரி மாதம் தான் அளித்திருந்த மனுவை பரிசீலிக்க்க் கோரியும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க்க் கோரியும் சென்னை உயர் நீதிநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார் சி.வி.சண்முகம்.

அந்த மனுவானது நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அவரது வழக்கறிஞர், ‘சமூக வலைத்தளங்கள் மற்றும் போன் மூலமாக கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்பாக அளித்த புகாரில் காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும்’ குற்றம் சாட்டினார். ஆனால், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, ‘சி.வி.சண்முகத்திற்கான பாதுகாப்பை மறுஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என தெரியவந்ததன் அடிப்படையில், அவருடைய பாதுகாப்பானது விளக்கிக்கொள்ளப்பட்டதாக’ தெரிவித்தார்.

இதனையடுத்து பாதுகாப்பு கோரி சி.வி.சண்முகம் அளித்த மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி சந்திரசேகரன் விசாரணையை மார்ச் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.