Mon. Jul 8th, 2024

அதிமுக அவசர வழக்கில் இன்று விசாரணை.. – மாநாட்டுக்கு தயாராகும் ஓ.பி.எஸ்..!

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். ஆகிய இருவருக்குமிடையே ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றிய போது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் அவருக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்தாலும், எடப்பாடியாரின் மேல் முறையீட்டின் மீது விசாரணை நடத்திய இரட்டை நீதிபதிகள் குழுவோ, ‘பொதுக்குழு செல்லும்’ என தீர்ப்பு வழங்கியது.

            இதையடுத்து, அதிமுகவில் ஓ.பி.எஸ்.சின் அஸ்திவாரமே ஆட்டம் கண்ட நிலையில்தான் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர், ‘கட்சியிலிருந்து தங்களை நீக்கியது செல்லாது’ என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நாள் குறித்து மகுடம் சூட்ட தயாராகி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதை, எதிர்த்து ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களான அந்த மூவரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியதன் விளைவாக, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் வழக்கு விசாரணையில் தீர்ப்பு வரும் வரை அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதித்திருந்தது நீதிமன்றம்.

உயர் நீதிமன்றம், சென்னை

அவ்வழக்கானது விடுமுறை தினமான இன்று அவசர வழக்காக கருதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று (22.03.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட இருதரப்பு வழக்கறிஞர்களும் ஏற்கனவே கூறிய அதே கருத்துக்களை தங்கள் வாதங்களாக வைத்த நிலையில் ஒட்டுமொத்த அதிமுகவினரும் அதன் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வமோ, ‘எதற்கும் தயார்’ என்ற மனநிலைக்கு வந்து விட்டதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்

இது குறித்து ஓ.பி.எஸ்.சின் வலது கரமாக இருக்கும் ஒரு முக்கிய நபரை நேரில் சந்தித்து பேசினோம். “பட்டவர்த்தனமாக சொல்லப்போனால், தீர்ப்பின் முடிவு எப்படி வந்தாலும், என்னதான் தொண்டர்களும் கூட எங்கள் பக்கம் இருந்தாலும், தான் ஆசைப்பட்டபடி கட்சியை கைப்பற்றாமல் விடமாட்டார் எடப்பாடி என்பதே உண்மை. அதற்கு காலதாமதம் வேண்டுமானால் ஆகலாம். ஒருவேளை தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வரும் பட்சத்தில், ‘அடுத்து என்ன செய்வது?’ என்பது குறித்து தீர்க்கமாகவே முடிவு செய்து விட்டார் ஓ.பி.எஸ்.

இதற்காக, தனிக்கட்சி துவங்கவும் தயாராகி விட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் என்றும் மாறா கொள்கைகளை பின்பற்றி, ஜெயல்லிதாவின் பெயரை முன்னிறுத்தி கட்சிக்கான பெயரும், அதன் பை – லாவும் கூட தயார் செய்து தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யவும் கூட ஏற்பாடுகள் முடிந்து விட்டன. இருந்தாலும், தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்” என சூசகமாக கூறினார் அவர்.

வெல்லமண்டி நடராசன் – கு.ப.கிருஷ்ணன்

இந்நிலையில், தீர்ப்பு எப்படி வந்தாலும், அதைக் கொண்டாடும் விதமாகவோ அல்லது தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடும் வகையிலோ அடுத்த மாதமோ அல்லது மே முதல் வாரத்திலோ திருச்சியில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நட்த்தவும் ஓ.பி.எஸ். தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக இடம் தேர்வு பணிகளையும், மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளையும் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி முன்னால் அமைச்சர்களும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுமான கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராசன் ஆகியோர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆக, ‘டேக்ஆஃப்’ -க்கு தயாராகி விட்டார் ஓ.பி.எஸ்..!