Thu. Dec 19th, 2024

காலையில் வேலூர்… மதியம் நெல்லை… மாலையில் ஈரோடு..! – வெச்சு செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை!

Vigilance raids in 3 places today

வேலூர் மாவட்ட திட்ட இயக்குனராக பணியாற்றும் ஆர்த்தி என்பவரின் கணவரான சாந்தமூர்த்தி சென்னையில் வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். மனைவி மாவட்ட அதிகாரியாக இருந்தாலும், ‘வருமானத்தில் அவரை விட சாதனை படைக்க வேண்டும்’ என்ற எண்ணத்தை செயலாக்கம் செய்த காரணத்திற்காக லஞ்ச ஒழிப்புத்துறையில் பார்வையில் சிக்கினார் சாந்தமூர்த்தி. எனவே, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேரம் காலம் பார்த்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் இன்று (21.03.2023) அதிகாலை சாந்தமூர்த்தியின் மனவியும் மேலூர் மாவட்ட  ப்ராஜக்ட் டைரக்டருமான ஆர்த்தி வசிக்கும் வேலூரில் உள்ள அரசு பங்களாவிற்குள் நுழைந்து திடீர் சோதனை நடத்தியதோடு, தர்மபுரி அருகில் நார்த்தம்பட்டியில் உள்ள சாந்தகுமாரின் சொந்த வீட்டிலும் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.

ஆர்த்தி

அப்போது, கணவருக்கு போட்டியாக மனைவியும் ‘புகுந்து விளையாடி இருக்கலாம்’ என்பதற்கான சில ஆதாரங்களும் சிக்கவே, இந்த தகவலை உடனடியாக தங்கள் உயரதிகாரிகளுக்கு ‘பாஸ்’ செய்தனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். அதன் தொடர்ச்சியாக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆர்த்தியில் தந்தையும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியுமான கலைமணி என்பவர் வீட்டிலும் திருச்சி மாவட்டலஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி சோதனை குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பறந்து கொண்டிருந்த அதே நேரத்தில் நெல்லை சிப்காட்டில் உள்ள  நிலம் எடுப்பு தாசில்தார் சந்திரன் என்பவர் வீட்டில் சத்தமில்லாமல்  நுழைந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தி ரொக்கப்பணம் 30 லட்சம் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர்.

சிவகுமார்

அதே போல, இடைத்தேர்தலுக்கு புகழ்பெற்ற ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவக்குமார் வீட்டிற்கும் இன்று காலையில் திடீர் விசிட் அடித்தனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். அப்போது, சிவக்குமாரின் வீடு பூட்டியிருக்கவே, ‘ஒருவேளை தகவல் தெரிந்து எஸ்கேப் ஆகிவிட்டாரோ?’ என்று சந்தேகப்பட்ட அவர்கள் 2 காவலர்களை அங்கேயே ‘பாரா’ போட்டதோடு செல்போனில் சிவகுமாருக்கு மெசேஜும் அனுப்பினர்.  இதையடுத்து, மாலையில், சிவகுமார் வீட்டுக்கு வரவும், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் தங்கள் சோதனையை துவக்கிய போலீசார், அங்கிருந்தும் சில ஆவணங்களை கைப்பற்றி சென்றிருப்பதாகவும் கூறப்ப்படுகிறது. சிவக்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் (சென்னை)  நகராட்சியில் ஆணையராக இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்து அப்போதிருந்தே விஜிலன்ஸ் ரேடாரில் சிக்கியிருந்தார். இதே சிவக்குமார்தான் நடந்து முடிந்த ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கந்தசாமி ஐ.பி.எஸ்

கடந்த வாரம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி மேற்பார்வையில் ஐஜிக்கள் பவானீஸ்வரி, துரைக்குமார் ஆகியோரது தலைமையில் தமிழ்நாடு முழுவதும் 12 அரசு துறைகளின் கீழ் இயங்கும் 60 அரசு அலுவலகங்களின் வாயில் கதவுகளை மூடி, செல்போன்களை பறித்து ‘திடீர் சோதனை’ நடத்தி அதிகாரிகளை தெறிக்க விட்ட லஞ்ச ஒழிப்பு  போலீசார் மீண்டும் இன்று தங்கள் பணிகளை செவ்வனே செய்து ரிலாக்ஸ் மூடில் இருந்த அதிகாரிகளை அலெர்ட் மோடுக்குள் தள்ளி விட்டனர்.