Mon. Jul 8th, 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு திருட்டு விவகாரம்… – சிக்கிய ஈஸ்வரி; கக்கிய கணவர்!

போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடு

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ஐஸ்வர்யாவுக்கும், அவரது கணவரும் நடிகருமான தனுஷுக்கும் இடையே உண்டான மனப்பிளவு காரணமாக கணவரின் சென்னை சிஐடி நகர் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் கடந்த சில மாதங்களாக போயஸ் கார்டனில் உள்ள தனது தந்தை ரஜினிகாந்தின் வீட்டில் வசித்து வருகிறார்.

                இந்நிலையில், தனது வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 27.02.2023 அன்று அவர் புகார் அளித்திருந்தாலும், நேற்று (20.03.2023) வெளியான அத்தகவல் திரையுலகினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்த தகவல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கொத்தாக அள்ளி கெத்து காட்டியிருக்கிறது காவல்துறை.

‘குற்றவாளிகளுக்கு ஸ்கெட் போட்டது எப்படி?’ என தனிப்படை போலீசார் சிலரிடம் பேசினோம்.

ஐஸ்வர்யா ரஜினி காந்த் நகைகளை வைத்துள்ள குறிப்பிட்ட  அந்த லாக்கரை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தான் திறக்கவே இல்லையென தனது புகாரில் கூறியிருந்தார். (முதல் தகவல் அறிக்கை எண்: 46/2023). தற்போது அவர் போயஸ்கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் உள்ள தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்தாலும், அதற்கு முன்பு செயின்ட் மேரீஸ் சாலை, சிஐடி நகர் என 2 இடங்களில் வசித்து வந்துள்ளார்.

                இதனால், ‘நகைகள் திருட்டுப் போன காலகட்டம் எதுவாக இருக்கும்?’ என்பதை புரிந்து கொள்வதில் குழப்பம் இருந்தது. கைரேகை எடுப்பது, பழைய சிசிடிவி காட்களை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்வது போன்றவற்றில் சில சிரமங்கள் இருந்தபோதும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து அவரோடு இருக்கும் பணியாட்கள் குறித்த விபரங்களை முதலில் சேகரித்தோம். அதில், சிலர் தற்போது அவரோடு இல்லையென்றாலும் கூட தான் சந்தேகப்படும் நபர் என சிலரை தெரிவித்திருந்தார் ஐஸ்வர்யா.

                எனவே, குறிப்பிட்ட சிலரின் மொபைல் எண்கள் மற்றும் அந்த மொபைல் எண்களோடு தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் பரிமாறப்பட்ட தொகைகள் குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டதில்தான் அவரது வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி என்பவர் மீது சந்தேகம் வலுத்தது.

அவரை மட்டும் தனியாக அழைத்து விசாரித்த போது ஆரம்பத்தில், ‘சாமி சத்தியமாக..’ என மறுத்த அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, மந்தைவெளியைச் சேர்ந்த அவரது கணவர் அங்கமுத்துவிடமும் தனியொரு இடத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்ந்தது.

ஈஸ்வரி – அங்கமுதது

அப்போதுதான், ஐஸ்வர்யாவின் லாக்கருக்கு கள்ள சாவி தயாரித்துக் கொடுத்தது முதல், அவருக்கு நம்பகமான வேலைக்காரியாக இருந்த தன் மனைவி ஈஸ்வரி மூலம் லாக்கரில்  இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சந்தேகம் வராத அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடியது, குறிப்பிட்ட சிலரிடம் அதை விற்றது, லட்சக் கணக்கில் இருந்த தங்கள் கடன்களை அடைத்தது, சென்னை சோழிங்கநல்லூரில் 95 லட்ச ரூபாய்க்கு சொகுசு பங்களா வாங்கியது என தங்களின் ‘ஜகஜ்ஜால’ வேலைகள் அத்தனை குறித்தும் அடம் பிடிக்காமல் தனிப்படை போலீசாரிடம் கக்கி விட்டான் அங்கமுத்து” என்ற அவர்கள், தற்போதைக்கு 20 சவரன் தங்க நகைகள் மற்றும் நில ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும், இவர்களோடு தொடர்புடைய மேலும் சிலரையும் வலைவீசி தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.