Mon. Jul 8th, 2024

“வேளாண் பட்ஜெட் – 2023” விவசாயிகளுக்கு ஜாக்பாட்டா?

.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், பயிரிடும் பரப்புகளை செம்மைப்படுத்தி அதிகரிக்கவும் தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் பழக்கம் உருவானது. அதன்படி, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதன் முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் 85 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பனை மரங்களை பாதுகாக்கவும், பனைத் தொழிலை மேம்படுத்தவும் வகுக்கப்பட்ட புதிய திட்டமானது இயற்கை ஆர்வலர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது.

 அப்போது, ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் மிகப்பெரிய அளவில் விவசாயிகள் போராடி வந்த காரணத்தால்,  அந்த விவசாயிகளுக்கு காணிக்கையாக்குவதாகக் கூறி வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்த அந்த பட்ஜெட்டில்தான் அதுவரை வேளாண்மைத்துறை என அழைக்கப்பட்டு வந்த அத்துறையானது விவசாயிகள் பெருமிதம் கொள்ளும் வகையில் ‘வேளாண்மை – உழவர் நலத்துறை’ எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அடுத்ததாக, கடந்த 2022 மார்ச் மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட 2-ஆவது வேளாண் பட்ஜெட்டின் போது வேளான்மை துறை வளர்ச்சிக்கு ரூபாய் 33 ஆயிரத்தி 77 கோடியும், பயிர்காப்பீட்டு மானியத்திற்காக மட்டும் ரூபாய் 2 ஆயிரத்தி 33 கோடியும் ஒதுக்கப்பட்டு அண்டை மாநிலங்களையும் கூட தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்நிலையில்தான் இன்று (21.03.2023) காலை 10 மணியளவில் 3 – ஆவது வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.

கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

முன்பாக சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் மறைந்த திமுக தலைவரும், முன்னால் முதல்வருமான கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று வேளாண் பட்ஜெட் அடங்கிய டிஜிட்டல் ஆவணங்களை அங்கு வைத்து மரியாதை செலுத்திய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், விவசாயிகளைப் போலவே பச்சைத் துண்டை தோளில் அணிந்தபடி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனது 3 – ஆவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அப்போது, இன்றைய சூழலில் இயற்கையோடு நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டமாக மாறிவிட்ட மாறிவிட்ட விவசாயத்தை மேம்படுத்த தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், திட்டங்கள்,  இலவச மின்சாரம் வழங்கியது,  நிலத்தடி நீரை அதிகப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டெல்டாவில் குறுவை சாகுபடியை அதிகரித்தது போன்ற தகவல்களையும், 2021-22 நிதியாண்டில் 185 வேளாண் பட்டதாரிகளுக்கு தலா 1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதையும், ‘நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கம்’ மூலம் 196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டதையும் பகிர்ந்து கொண்ட அவர், வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 2,504 கிராமங்களில் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.



வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

  • கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பருவத்திற்கேற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.
  • நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு மானியத்திற்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு.
  • 60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடிக்கு வேளாண் கருவிகள் கொள்முதல்.
  • சிறப்பாக செயல்படும் அங்க விவசாயிகளுக்குரூ.5 லட்சம் மற்றும் ‘நம்மாழ்வார் விருது’!
  • விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க புதிய வாட்ஸ் ஆப் குழு.
  • வரும் ஆண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு.
  • ஆறுகள் கால்வாய்களில் தடுப்பணைகள் வயல் சாலைகள்
  • அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை.
  • வேளாண் தோட்டக்கலை பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் தொழில்முனைவோராக மாற தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு.

  • விவசாயிகளிடம் சிறுதானியங்களை கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம். அதில், முதல் கட்டமாக
  • நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ரேசனில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க திட்டம்
  • பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
  • 385 வட்டார வேறாண் விரிவாக்க மையங்களில் தமிழக மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள் செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
  • சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி
  • நாமக்கல் திருப்பூர், ஈரோடு புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மண்வட்டங்கள் புதிதாக சிறு தானிய மண்டலங்களில் இணைக்கப்படும்
  • 6 ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தமிழக வேளாண் பருவம் தவறிய 1.82 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.123.63 கோடி இழப்பீடு வழங்க நடவடிக்கை
  • விவசாயிகளிடம் சிறுதானியங்களை கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.


  • தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி
  • வெங்காயம் ஆண்டு முழுவும் சீராக கிடைக்க ரூ.29 கோடி
  • பண்ருட்டி பழாப்பழத்திற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து, பகுதிகளுக்கு ஏற்ப பழா ரகங்களை அறிமுகம் செய்து, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி
  • ராமநாதபுரத்தில் மல்லிகை செடிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத்தரவும் ரூ.7 கோடி நிதி
  • சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி
  • குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி
  • தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி
  • கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.105 கூடுதலாக வழங்கப்படும்.
  • கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை தொகுப்பு அமைக்கப்படும். கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு
  • 3- 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்
  • பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வேளாண் விஞ்ஞானிகள் நியமிக்கப்படுவார்கள்.
  • பயிர் பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்காக பயிர் காப்பீட்டு திட்டத்தில் மாநில அரசின் காப்பீட்டு கட்டண மானியத்திற்கு ரூ.2,337 கோடி நிதி ஒதுக்கீடு
  • நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழகத்திலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் பருத்தி இயக்கம் செயல்படுத்தப்படும்.
  • தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அடைய தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம்
  • எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம்
  • ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம்
  • உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் பயிரு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரிக்க ரூ.30 கோடி ரூபாய் மதிப்பில் பயிறு பெருக்குத் திட்டம்.
  • ரூ.50 கோடி நிதியுதவி மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, தேனி வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன்.
  • விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், வாடகை மையங்கள் உள்ளிட்டவைக்கு ரூ.125 கோடி நிதி
  • பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு
  • வேளாண் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித்துறையுடன் இணைந்து பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
  • உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட , ரூ.130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்
  • முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டேர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஹெக்டேரில் நடவு செய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை
  • வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு, தமிழகத்தில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு
  • பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையை பரவலாக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு
  • பசுமை குடில், நிழல் வலைக்குடில் அமைத்து உயர்மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் பூக்கள் ஆண்டு முழுவதும் சாகுபடி
  • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு
  • தண்ணீர் பற்றாக்குறை பகுதிகளில் 53400 ஹெக்டேர் நுண்ணீர் பாசன முறையினை நிறுவவதற்கு மானியமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு
  • ஆயிரம் ஹெக்டேரில் செளசெள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • பலாப்பழத்தில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
  • தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேரில் சாகுபடியை உயர்த்த ரூ.11 கோடி
  • ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலம் அமைக்கப்படும்
  • பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலைகழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மறுகட்டமைப்பு 27 சேமிப்புக் கிடங்குகளில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்படும். அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்படும்.
  • அரசம்பட்டு தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்
  • தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவிரி வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாருவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 1,32,000 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறும்

என்று அறிவித்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். ஆக மொத்தத்தில், தமிழக விவசாயிகளுக்கும், வேளாண் துறை சார்ந்த பலருக்கும் ‘ஜாக்பாட்டாக’ வெளிவந்துள்ளது இந்த வேளாண் பட்ஜெட் – 2023..!