Thu. Dec 19th, 2024

யார் இந்த மாதேஷ்..? | வளைத்துப் போட்ட STING BROKER..! |

அரசியல்வாதிகளின் உண்மை முகத்தையும், அரசியல் மற்றும் சமூக அவலங்களையும் தோலுரித்துக் காட்டுகிறேன் என்ற பெயரில் யூடியூப்களில் வலம் வந்த சிலரின் முகத்திரையை ‘மறைந்திருந்து வெளிக்கொணர்தல்’ என்ற தனது ‘ஸ்டிங் ஆபரேசன்’ மூலம் கிழித்தெறிந்து இருக்கிறார் முன்னால் பா.ஜ.க. ஆதரவாளரான மதன் ரவிச்சந்திரன். தொடர்ச்சியாக அவர் வெளியிட்டு வரும் வீடியோக்கள் தமிழக அளவில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், “பாத்தியா…? எல்லா பயலுகளுமே காசு வாங்கிட்டுத்தான் பேசுறாங்க..!” – என்ற பேச்சுக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டு வரும் அந்த வீடியோக்களில் சிக்கிய பலரையும் அறுப்புக் கூடத்திற்குள் ஆட்டுக்குட்டியாய் அழைத்து வந்தது மாதேஷ் என்கிற ஏ.மாதேஷ்வரன் என்பது தெரியவரவே, அதுவரை நடுநிலையாளராக, நெறிதவறாத நெறியாளராக, தன்னைத்தானே பத்திரிகையாளர் எனக் கூறிக்கொண்ட மாதேஷ் என்கிற அந்த யூடிபரின் கருப்புப்பக்கங்களும் ‘லைம் லைட்டிற்குள்’ வந்துள்ளது. பணத்தாசை காட்டியும், போதை வாசத்தை வீசியும் தன்னுடைய சுயநலத்திற்காக பலரையும் பழிகடாவாக்கிய அந்த மாதேஷ் பத்திரிகையாளரா? அப்படி இல்லையெனில்,



அவரின் முதுகுப்பின்னாலும், மூளைக்கு உள்ளேயும் இருப்பது பத்திரிகையாளர்களா..? ஆம். என்றால் ஊடகத்துறையின் அந்த பிதாமகன்கள் யார் யார்? அவர்களின் பின்புலம் தான் என்ன..? எங்கு, எப்படி நடந்தது அந்த ஸ்டிங் ஆபரேசன்? அதன் நோக்கம் என்ன?
பின்னணியில் இருப்பது யார் யார்? – என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

யார் இந்த மாதேஷ்..?

ஆர்வம் மற்றும் எழுத்தாற்றல் காரணமாக பலரும், ஜர்னலிசம் படித்த சிலரும் பத்திரிகை துறையை தங்கள் உயிருக்கும் மேலாக மதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அனைத்து துறையிலும் இருப்பது போல புல்லுருவிகள் இத்துறையில் உண்டு. அவர்களில் பார்த்தீனியம் செடியைப் போல உடனடியாக களைந்தெறியப்பட வேண்டிய சிலரில் மாதேஷும் ஒருவர். காரணம் அவர் ஒரு பத்திரிகையாளரே கிடையாது என்பது முதல் உண்மை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகிலுள்ள காரப்பட்டி கிராமம்தான் மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனின் கதாநாயகனான மாதேஷின் சொந்த ஊர். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது பழமொழியாக இருந்தாலும் கிட்டத்தட்ட 6 மாதங்களாக நடந்த அந்த ஆபரேஷனில் பலமுறை ரகசிய கேமராவில் அகப்பட்டு இருக்கிறாராம் மாதேஷ்.பணம் தான் பிரதானம் என்ற குறிக்கோளோடு ஊடகத்துறையில் நுழைய முயன்ற மாதேஷின் உண்மை முகத்தை புரிந்து கொண்ட யாருமே அவருக்கு வாய்ப்பளிக்க முன்வராத நிலையில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு. FX – 16 என்ற யூடியூப் சேனலில் பணியில் சேர்ந்திருக்கிறார். அவ்வளவாக எழுதத் தெரியாவிட்டாலும் கொஞ்சம் பேச்சுத் திறமை கொண்ட அவரை வைத்து ஒப்பேற்றி இருக்கிறது..

FX – 16 நிர்வாகம். இருந்தாலும், பொதுவெளியில் தன்னை ரிப்போர்ட்டர் என்றே கூறிக் கொள்வார். இதற்காக, ஒரு பத்திரிகையாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் தன்னை முன்னிறுத்திக் காட்டுவதற்காக REPORTER என அடையாள அட்டையும் பெற்றிருக்கிறார். பிறகென்ன, நானும் ரவுடிதான் பாணியில் பத்திரிகை துறையின் பார்த்தீனியச் செடியாக வேர் விட்டு வளரத் துவங்கி விட்டார் மாதேஷ்

அடுத்து, 2020 ஆம் ஆண்டு ஆதன் தமிழ் சேனலில் இணைந்த அவர், ‘சார், உங்களைப் பத்தி ஒரு புரோகிராம் பண்றேன்’ என்று சொல்லியோ அல்லது, ‘சார், எல்லோரும் உங்களைப் பற்றி வேறு விதமா சொல்றாங்க. எங்க சேனல்ல உங்களை சூப்பரா ஹைலைட் பண்றோம்’ என்று ஆசை வார்த்தை கூறியோ பசையுள்ள மனிதர்களிடம் ஒட்டி எப்பேர்பட்டவரையும் மகாத்மா ரேஞ்சுக்கு உயர்த்துவதில் படுகில்லாடியான இவர், பணத்திற்காக எதையும் செய்வார் என தகவல் கசிய விடும் அவருக்கு நெருக்கமான சிலர், அதைத்தான், அந்த பீர் டின்களை ஆசையோடு வாரி அணைத்துக் கொள்ளும் வீடியோக்களும், ஒவ்வொருவராக கூட்டி வந்து கரன்சிகளை பாக்கெட்டில் திணிக்கும் வீடியோக்களும் பறை சாட்டுவதாகவும் கூறுகின்றனர்.

அதிலும், சவுக்கு சங்கரை தொடர்ச்சியாக பேட்டி எடுத்த பிறகு மாதேஷின் வளர்ச்சியானது எங்கேயோ போய் விட்டது. அதன் காரணமாக, வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு சாதகமாக பேசினால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும்? யார் மீது சேறு வாரியிறைத்தால் தனக்கு சோறு கிடைக்கும்? என்ற ரேஞ்சுக்கு மாதேஷ் கனவுகாண ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில்தான் மதன் ரவிச்சந்திரன் என்ற நபரால் போடப்பட்ட தூண்டிலில் சிக்கியிருக்கிறார் மாதேஷ். தான் சிக்கியது மட்டுமல்லாமல், தனது பணத்தாசை காரணமாக அரசியல் புள்ளிகள் முதல் அவரைப் போலவே திரைமறைவில் நாடகமாடிய சிலரையும் மக்கள் மத்தியில் சில்லரைகளாக்கி விட்டார். இவைகளை தவிர மாதேஷ் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை.

எதற்காக நடந்தது அந்த ஸ்டிங் ஆபரேசன்

பிஜேபியின் முன்னாள் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.டி.ராகவனின் பலான வீடியோ வெளியான விவகாரம், அதன் பின்னணியில் உள்ள வார் ரூம் சமாச்சாரம் போன்றவற்றையும், அதன் பின்னணியில் பணத்துக்காக நடக்கும் சில சங்கதிகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அதையும் தாண்டி பழி வாங்கல்களும் முக்கிய காரணம் என்பதை மதனின் வீடியோவை பார்ப்பவர்களே நன்கு அறிவார்கள். ஆனால், மதன் ரவிச்சந்திரனின் பின்னால் உள்ள சில பலமான நபர்களின் உந்து சக்திதான் இந்த ஸ்டிங் ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்க காரணமாக அமைந்தது கூறுகிறார்கள் தூண்டிலில் இருந்து தப்பிய சிலர். அதையெல்லாம் விரிவாக பார்ப்பதற்கு முன்பாக கதை நடந்த களம் பற்றி அறிவதும் முக்கியமானதாகும்.

யார் அந்த ஸ்டிங் புரோக்கர் ?

நவீன்

பலருக்கும் அறிமுகமான நபராக இருப்பதால் இந்த ஸ்டிங் ஆபரேஷனை முன்னின்று நடத்த வேறு ஒரு டீமை தயார் செய்ததாக மதன் ரவிச்சந்திரன் கூறினாலும், இதை வெற்றிகரமாக நடத்தி முடித்தது ஒற்றை நபர் என்பதுதான் ஆச்சரியம்.

தனக்கு மட்டுமே தெரிந்தால்தான் அது ரகசியம் என்பதை அறிந்த மதன் ரவிச்சந்திரனின் சாய்ஸ் மேலாண்மை படித்த ஒரு மாணவர் என்பதும் இந்த ரகசிய ஆபரேசனுக்காக குமார் என்ற பெயரில் செல்போனை பயன்படுத்திய அவரின் பெயர் நவீன் என்று மட்டும் இப்போதைக்கு தெரிந்து கொள்வோம்.

எங்கு நடந்தது அந்த ரகசிய ஆபரேசன்.?

சில டார்ஜெட்டுகளை அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று சந்திக்க முடிவு செய்யப்பட்டாலும், ஆதன் தமிழ் மாதேஷ் போன்ற சபலப் பேர்வழிகளை சந்திக்க நல்லதொரு ஹோட்டலை தேடத் துவங்கியது மதன் ரவிச்சந்திரன் டீம். சென்னை சிட்டிக்குள் எத்தனையோ ஹோட்டல்கள் இருந்தாலும் ஓரளவு முகம் தெரிந்த பிரபலங்கள் சங்கடமில்லாமல் வந்து செல்ல வசதியாக ஒதுக்குப் புறமாக இருக்கும் சில ஹோட்டல்களை தேர்வு செய்து வைத்தருந்தது ஸ்டிங் ஆபரேசன் டீம். ஆனால், இதுதாம்ப்பா நமக்கு ராசியாவும், வீடியோ எடுக்க ஈசியாவும் இருக்கு என்று அனுபவத்தை வைத்து முடிவு செய்யப்பட்ட இடம்தான் பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள அந்த துரியா என்ற ஸ்டார் ஹோட்டல்…!

பலருக்கும் பலமுறை பலவிதத்தில் விருந்தளித்த அந்த ஹோட்டலில் நடந்தது என்ன? இதுவரை வீடியோவில் பார்த்த சிலரையும், இன்னும் பார்க்கவிருக்கும் பலரையும் மாதேஷ் அங்கு அழைத்து வந்தது எப்படி? மதன் ரவிச்சந்திரனின் பின்னால் யாரோ இருப்பது போல மாதேஷின் பின்புலத்தில் இயங்கிய கருப்பு ஆடுகள் யார் யார் என்பதை அடுத்தடுத்து பார்ப்போம்..!