Sun. Oct 6th, 2024

தமிழக முதல்வரின் தொடர் சாதனை | இது ஸ்டாலின் ஸ்டைல் |

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆறு மாதங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், இந்த ஆறு மாதங்களில் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளைத் தொகுத்து சிறப்புக் காணொலி ஒன்றினை மலையாள செய்தித் தொலைக்காட்சியான மாத்ருபூமி வெளியிட்டுள்ளது.

‘இது ஸ்டாலின் ஸ்டைல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த சிறப்பு கானொலியில், தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் ஒரு தலைவராக, தமிழர்களின் இதயங்களில் எல்லாம் வாழ்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டியுள்ளது.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று தமிழ்நாட்டின் முதல்வராக அவர் பொறுப்பேற்கும் காட்சியோடு அந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. மக்களின் ஏகோபித்த நம்பிக்கையோடு பொறுப்பேற்ற திமுக அரசு கடந்த ஆறு மாதங்களில் என்ன செய்தது என்கிற பரிசோதனைதான் இந்த நிகழ்ச்சி என்ற முன்னுரை அடுத்து வருகிறது.

இதையடுத்து, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம், கொரோனா நிவாரணம் உள்ளிட்ட அவர் செயல்படுத்திய திட்டங்கள், அதனால் பலன் அடைந்தவர்களின் நேர்காணல் ஒளிபரப்பாகிறது. அடுத்ததாக, திராவிட அரசியல், சாதிகளுக்கு எதிரானது என்ற சித்தாந்தம் விளக்கப்படுகிறது. பின்னர், நறிக்குறவ பெண்ணுக்கு அண்ணாதானத்தில் உணவு மறுக்கப்பட்ட விவகாரம், அவர் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றது, பழங்குடியின மக்களுக்கான பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்டவைகள் வழங்கியது காட்டப்படுகிறது. அத்துடன் ஜெய் பீம் படத்தின் சில காட்சிகள் இணைகின்றன.

தொடர்ந்து, அரசியல் அரங்கிற்கு காட்சி மாறுகிறது. எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறந்தபோதும், ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் இறந்தபோதும் அவர்கள் வீட்டிற்குச் சென்று முதல்வர் துக்கம் விசாரித்த காட்சிகள் அடுத்து வருகின்றன. எதிர்க்கட்சியினரிடம் நாகரீகமாக நடந்து கொள்ளும் அதேவேளையில், அவர்களது ஊழலையும் குற்றச் செயல்களையும் ஸ்டாலின் சகித்துக் கொள்வதில்லை என்பது சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு பற்றி பேசப்படுகிறது. முல்லை பெரியாறு அணை சர்ச்சையில் கேரள அரசுடன் மோதல் போக்கைத் தவிர்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேசமயம், அனுமதிக்கப்பட்ட 142 அடி உயரத்திற்கு தண்ணீரை நிறுத்த ஆவன செய்கிறார். திமுக அரசின் இந்த ஆரம்பம் இனியும் தொடரும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு ஒரு தகுதி வாய்ந்த அரசு கிடைத்திருக்கிறது என்பதோடு அந்த நிகழ்ச்சி முடிவடைகிறது.