Sun. Oct 6th, 2024

குழந்தை வரம் தரும் பிரம்மச்சாரி கோவில்..!

கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகிலுள்ள தலம் கிடங்கூர். இங்குள்ள கோயிலில் பிரம்மச்சாரி கோலத்தில் முருகன் வீற்றிருக்கிறார். குழந்தை வரம் வேண்டுவோர் இக்கோயிலில் பிரம்மச்சாரி கூத்து என்னும் நிகழ்ச்சியை நேர்த்திக்கடன் செலுத்தினால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

அடர்ந்தவன பகுதியில் கவுன மகரிஷி தவமிருந்தார். ராவணனை வதம் செய்வதற்காக இலங்கைக்கு சென்ற ராமர், காட்டில் மகரிஷியை சந்தித்தார். அப்போது அயோத்தி திரும்பும் வழியில் மகரிஷியைச் சந்திக்க வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால் சந்திக்க வரவில்லை. சீதையுடன் அயோத்தி செல்லும் அவசரத்தில் தன்னை மறந்து விட்டாரே என மகரிஷியின் மனம் வருந்தியது. இதன்பின் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி தவத்தில் ஈடுபட்டார். அவரும் குடும்பஸ்தர் என்பதால் தரிசனம் தருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகத்துடன் பிரம்மச்சாரி கோலத்தில் முருகனை வழிபட்டார்.

மகரிஷி பிரதிஷ்டை செய்த முருகன் சிலையே இங்கு மூலவராக உள்ளது.
சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தின் மீது மயில் வாகனம் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட குறுந்தொட்டி என்னும் மரத்தால் உருவாக்கப்பட்ட கூத்தம்பலம் இங்குள்ளது.

ராமாயண, மகாபாரத காட்சிகளும், பரத முனிவரின் நடன முத்திரைகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. திருவிழா காலத்தில் கூத்துகள் நடத்தப்படுகிறது. முருகனைக் குறித்த ‘பிரம்மச்சாரி கூத்து’ இதில் பிரசித்தி பெற்றது. வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், தொழில் போட்டியை சமாளிக்கவும், எதிரிகளை அடக்கவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலில் உள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு குருதி பூஜை நடக்கிறது.

பிரம்மச்சாரி கோலத்தில் முருகன் இருப்பதால் சன்னதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை. கொடிமரத்தின் அருகே நின்று மட்டும் தரிசிக்கலாம். நோய் தீர பஞ்சாமிர்த அபிஷேகம், திருமணத்தடை நீங்க அர்ச்சனையும் செய்கின்றனர். நினைத்தது நிறைவேற துலாபாரம், காவடி சுமந்தும், சுட்டு விளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர். பெருமாள், பகவதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.

இந்த கோவில் கோட்டயம் – பாலா சாலையில் 21 கி.மீ.,
விசேஷ நாள் : திருக்கார்த்திகை, தைப்பூசம் மாசி பிரம்மோற்ஸவம்
நேரம்: அதிகாலை 4:00 – 12:00 மணி; மாலை 5:00 – 8:00 மணி