Mon. Jul 8th, 2024

பீர்க்கன்காரணை சூதாட்டத்தில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பா? | உதவி ஆய்வாளர் உட்பட 15 பேர் கைது |

தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், பாரதி நகர், 1வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு புகார் வந்ததையடுத்து பரங்கிமலை துணை ஆணையரிடம் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் சூதாட்டம் நடந்த இடத்தில் நடத்திய சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர். இருவர் மட்டும் அங்கிருந்து ஓட முயன்றனர் அப்போது அந்த இருவரையும் தனிப்படை போலீசார் பிடித்து பீர்க்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபர்களில் ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சம்பத் (58), என்பதும் மேலும் ஒருவர் தீயணைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூர்த்தி (59),  பொன்னுசாமி (56), அருள்ஜோதி (50), பிரபுதாஸ் (42), கிருஷ்ணன் (45), புருசோத்தமன் (27), ஜெயகுமார் (48), ராஜா (45), செல்வராஜ் (69), ராஜ்குமார் (30), தங்கராஜ் (53), சங்கர் (42), கிருஷ்ணன் (43), வெங்கடேஷ் (29) உட்பட மொத்தம் 15 பேர் மீதும் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து சொந்த ஜாமீனில் காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தனர்.

கடந்த 2 மாதமாக இந்த வீட்டில் சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் இந்த சம்பவத்தில் பீர்க்கன்காரணை காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ்க்கு தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு தெரிந்தே இந்த சூதாட்டம் நடைபெற்றதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவர இது குறித்து முழுமையாக விசாரிக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பொன்ராஜ் காவல் ஆய்வாளர்

காவல் ஆய்வாளர் பொன்ராஜ் இதே காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 2018 ஆம் ஆண்டில் பணியாற்றிய போது பெருங்களத்தூர் ஆர்.எம்.கே.நகரில் நடந்த காந்திமதி என்பவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை என்றும், இதற்கு நடுவில் ஆய்வாளர் பொன்ராஜ் இந்த காவல் நிலையத்தில் இருந்து சென்று மீண்டும் இதே இடத்திற்கு பணிமாறுதல் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.‌

ச.விமலேஷ்வரன்