Wed. Apr 9th, 2025

ஆவின் நிறுவன பணி நியமன முறைகேடு தொடர்பாக | வள்ளலார் I.A.S., மாற்றமா?..|

தமிழ்நாட்டில் வேளாண்மை தொழிலுக்கு நிகராக, ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் தரும் அமைப்பாக திகழ வேண்டிய ஆவின் நிறுவனம், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஊழலின் ஊற்றுக் கண்ணாக மாறி பல்வேறு மாவட்டங்களில், பால் உற்பத்தியாளர்கள் நிலை அந்தோ! பரிதாபமென்ற நிலைக்கு மாறி பரிதவிக்கும் நிலைக்கு கொண்டு வந்த பெருமையை, ஆவின் நிர்வாக இயக்குனர்களாக பதவி வகித்த சி.காமராஜ் மற்றும் எம்.வள்ளலார் உருவாக்கியுள்ளனர்.

ஆவின் இயக்குனராக பதவி வகித்த சி.காமராஜ் காலத்தில் நடத்திய ஊழல் திருவிளையாடல் காரணமாக ஆவின் நிறுவனம் பலத்த நட்டத்துக்கு வழி வகுத்து, விசில்ப்ளோயர் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திட பல்வேறு புகார் மனுக்கள் ஆதாரமாக இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு தரப்பட்டுள்ளது.

பாலின் விலையை திகிலூட்டும் வகையில் உயர்த்திய சி.காமராஜ், நிர்வாகம் தொடர்பாக எழுந்த புகாரின் காரணமாக, மாற்றப்பட்டு எம்.வள்ளலார் என்பவர் பால்வளத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இருவருமே கனிம வளம் மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இருவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் பால்வளம் கவனிக்கும் செயலாளரின் பரிபூரண ஆதரவு இருந்ததால், வரலாறு காணாத வகையில் தன்னிச்சையாக செயல்பட்டு பால்வளத்தை பாழ்படுத்திடும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையென செயல்பட்டனர்.

சி.காமராஜ் நிர்வாகத்தை விட மோசமான நிர்வாகத்தை தந்து வள்ளலார், பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் கடும் அதிருப்தியை சந்தித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி, அடுத்தடுத்து ஆவின் பால் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்ட தருணங்களில், ஆவின் நிர்வாகச் செலவுகள் குறைக்கப்படும் என்றும், உற்பத்தியாளர்களுக்கு நலன் பேணப்படுமென்றும், ஆவின் பால் விற்பனையை உயர்த்தப்படுமென்றும்” தெரிவித்து வந்தார்.

ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் தேவையற்ற பணியிடங்களை நிரப்பி, பணியிடங்கள் விற்பனையில் காட்டிய அக்கறையை ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்தோர் பால் விற்பனையை உயர்த்துவதில் காட்டவில்லை. தினக்கூலிப் பணியாளர்கள் நிரப்பக்கூடாது என்ற அரசாணையையும் மீறி கடந்த எட்டாண்டுகளில் சுமார் 450 பேர் சென்னையில் தினக்கூலிப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களை, ஆவின் நிர்வாக இயக்குனராக பதவியேற்ற எம்.வள்ளலார் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு, தினக்கூலி ஊழியருக்கு தந்த கூலியை விட அதிக செலவினத்தில், தனது பினாமி வேளச்சேரி ரவி என்பவர் மூலம் ஒப்பந்தம் செய்து தனது ஊழலை வெளிப்படுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் முழுதும் ஆவின் விற்பனைக்கு மொத்த விற்பனையாளராக, சில்லரை விற்பனையாளர் ஆக இருந்த சுப்ரமணியன் என்பவரை காலையில் விண்ணப்பம் பெற்று மாலையில் மொத்த விற்பனையாளர் என்று நியமித்து, கின்னஸ் சாதனைக்கு வழி வகுத்தார்.

ஆவின் நிறுவனத்தில் கடந்த நவம்பர் மாதம் சுமார் ஆயிரம் பணி இடங்களுக்கு அனுமதியளித்து, பத்து இலட்சம் முதல் முப்பது இலட்சம் ரூபாய் வரை, பணிக்கு தகுந்தவாறு விலை நிர்ணயித்து விற்பனை கனஜோராக வசூல் மேளா நடந்து கொண்டுள்ளது.

ஐயா திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் பால்வளத்துறை அமைச்சரான பிறகு, அமைச்சரின் ஆசியுடன் காமராஜ் தொடங்கிய பாணியில் வள்ளலார் வரை தொடர்ந்து, அது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் பால் கொண்டு வரும் போது தண்ணீர் கலந்து கைது செய்யப்பட்ட ஆவின் வைத்தி ஒரு நிழல் அமைச்சரான பின்னர், பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் போதே, மொத்த பால் குளிர்விப்பான்கள் உள்ள இடங்களிலேயே பாலில் தண்ணீர் கலந்து முறைகேடுகள் நடந்திட, வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பல கோடி ரூபாய் இழப்புக்கு காரணமாக செயல்பட்ட அதிகாரிகளை காக்கும் கரமாக செயல் பட்டத்தை பால் முகவர்கள் சங்கம் பலமுறை சுட்டிக் காட்டி வந்தது.

மதுரையில் பொது மேலாளர் ஆக நியமிக்கப்பட்ட ஜனனி சௌந்தர்யா என்ற மாவட்ட வருவாய் அலுவலர் பதவியேற்ற பின்னர் நாள் தோறும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் வள்ளலார் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரும், கண்டு கொள்ளாததற்கு காரணம், கடந்த ஆறு மாதங்களில், எவ்வித முறையுமின்றி, தொகுப்பூதியத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதன் பின்னணியில், வள்ளலாரின் மதுரையில் உள்ள சகோதரரின் தலையீடு உள்ளதாக, ஆவின் நிர்வாகத்தின் நேர்மையான அலுவலர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஆவின் பொது மேலாளர் ஜனனி சௌந்தர்யாவின் கணவர் ஓர் ஒப்பந்தகாரர். இவரின் பினாமி பெயரிலும், ஆவின் மதுரை உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் என்பவரின் பினாமி பெயரிலும் பல்வேறு போலி பில்கள் மூலம் தவறுகள் நடந்துள்ளதாம். மேலும், மதுரை பால் திட்ட கூட்டுறவு நாணயச் சங்கத்தில் 7.92 கோடி ரூபாய் கையாடல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு பணிக்கு வராமலேயே சம்பளம் வழங்கி வருகிறாராம்.

இது தவிர 63 பணியிடங்கள் அவசரமாக நியமிப்பதில் மட்டுமே ஆவின் பொது மேலாளர் ஜனனி செளந்தர்யா கவனம் செலுத்துவதுடன், செய்தி மற்றும் காட்சி ஊடகங்களில் செய்தி வராது தவிர்க்க, பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஆவின் பால் பொருட்கள் வழங்கி, தன்னை பற்றி செய்திகள் வராது “கவர்” செய்து விடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் முதல்வர் அலுவலகம் வரை சென்றுள்ளது. இப்படி ஆவின் இணையம் மற்றும் ஒன்றியங்களில் இமாலய தவறுகளுக்கு ஊக்குவிக்கும் செயலில் வள்ளலார் இருப்பதாக, அதிமுக கட்சி நிர்வாகிகளும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் ஆவின் அதிகாரிகளின் அத்து மீறல்கள் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்திற்கு புகார்களாக பறக்க, நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டத்தின் மற்றொரு அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் இராஜவர்மனின் அதிரடி பேச்சின் எதிரொலியால் ஆவின் ஆணையர் வள்ளலார் மாற்றப்பட்டு நந்தகுமார் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

பால்வளத்துறையின் நிர்வாக சீர்கேடுகளை களைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடா விட்டால் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்துக்கு ஆவின் ஊழல்கள் அணிவகுத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்ற பெரிய ஆளுமையின் கீழ் தலைமை இல்லாத, அதிமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகம் மூக்கணாங்கயிறு இல்லாத ஆவினமாக செயல்படுவதாகவே தெரிகிறது…

ச.விமலேஷ்வரன் பத்திரிகையாளர்