Sun. Oct 6th, 2024

போலி கால் சென்டர் மோசடி | திமுக அமைப்பாளர் தலைமறைவு | மனைவி உட்பட இருவர் கைது |

சென்னை, வேளச்சேரியில் உள்ள அன்னை இந்திரா நகர், காமராஜர் தெருவை சேர்ந்த கணேஷ் சங்கர் (27) என்பவர் செல்போன் எண்ணுக்கு அழைத்த நபர், ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தங்களுக்கு பணம் தேவைப்பட்டால் ஆவணங்கள் சமர்ப்பித்து லோன் பெற்றுக் கொள்ளலாம் என்று, முதலில் லோன் தொகையில் 10 சதவீதத்திற்கு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை நம்பிய கணேஷ் சங்கர், தனக்கு ரூ.4 லட்சம் லோன் தேவை என்று கூறியுள்ளார். அதன் பேரில், கணேஷ் சங்கர் மேற்படி நிறுவனத்தில் பேசிய நபருக்கு அவரது அடையாள ஆவணங்களை செல்போனில் அனுப்பியும், ரூபாய் 40,000/-க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். ஆனால் சில மாதங்கள் ஆகியும், கணேஷ் சங்கருக்கு லோன் தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்ததால், கணேஷ் சங்கர் இது குறித்து  வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வேளச்சேரி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அடையாறு காவல் சைபர் குற்றப் பிரிவினருடன் இணைந்து, மேற்படி லோன் தருவதாக கூறிய நிறுவனத்தின் செல்போன் எண் மற்றும் தரைவழி இணைப்பு எண்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தியதில் பிரேம்குமார் என்பவர் மேடவாக்கம், சந்தோஷ்புரம், வேளச்சேரி மெயின் ரோடு என்ற முகவரியில் பெரேக்கா சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் போலியான கால் சென்டர் நடத்தி வந்ததும், இந்த அலுவலகத்தில் தரைவழி தொலைபேசி எண்கள் மற்றும் செல்போன்கள் மூலம் வாடிக்கையாளகளிடம் உடனுக்குடன் லோன் தருவதாகக் கூறி, லோன் தேவைப்படும் நபர்களை இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வைத்து, லோன் பெற்று தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

மேலும் முக்கிய குற்றவாளியான திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரேம்குமார் (32), என்பவர் தற்போது தலைமறைவாகி உள்ளதால் மேற்படி போலி கால் சென்டரை நிர்வகித்து வந்த பிரேம்குமாரின் மனைவி, மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பென்னிஷா (23), மற்றும் கால் சென்டர் (Team Leader) கல்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கால் சென்டரில் பயன்படுத்தி வந்த தரைவழி தொலைபேசி இயந்திரங்கள்-7, செல்போனகள்-3, கார்-1 மற்றும் பணம் ரூ.40,000/- பறிமுதல் செய்யப்பட்டு இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரேம்குமார் மற்றும் அல்போன்ஸ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்.

நிருபர் மா வீரன்