Fri. Dec 20th, 2024

சென்னையில் முதன்முறையாக வழிப்பறியில் ஈடுபட்ட இளம் பெண் காதலனுடன் கைது |

ஆகஸ்ட் 14-2019

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரசன்னா லிப்ஷா (42) என்பவர் தனது நண்பருடன் காலை 8 மணியளவில் மூப்பனார் நினைவிடம் அருகே நடந்து சென்ற பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடிகள் பிரசன்னா லிப்ஷா வைத்திருந்த செல் போனை பிடுங்கி சென்றனர்.

இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்து, தேனாம்பேட்டை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் தலைமை காவலர் பொன்னுவேல் ஆகியோர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் சூளைமேட்டை சேர்ந்த ராஜூ மற்றும் அவருக்கு உடந்தையாக அவரது காதலி தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் சுவாதி என்பவரையும் இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் கைது செய்தனர். அப்போது இருவரும் போதைக்கு அடிமையாகி கஞ்சா மற்றும் மது போதையில் இருந்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ராஜு என்பவர் மீது ஏற்கனவே இருசக்கர வாகனம் திருடியது சம்மந்தமாக கடந்த ஆண்டு சிறை சென்றதும் மேலும் வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று இருசக்கர வாகனம் ஒன்றை திருடி அதை வைத்து கிண்டி மற்றும் தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தனது காதலி சுவாதியுடன் செல் போன்களை வழிப்பறி செய்ததும் உடனடியாக அதை பர்மா பஜார் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.கடைசியாக வழிப்பறி செய்த இரண்டு செல்போன்களை பர்மா பஜாரில் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக ராஜு ஒப்புக் கொண்டுள்ளார்…

தமிழகத்தில் இதுவரை வழிப்பறி சம்பவங்களில் பெண்கள் ஈடுபட்டது இதுவே முதல்முறை என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவர் மீதும் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…

-நமது நிருபர்