ஆட்சியர் என கூறி 60 ஆயிரம் மோசடி முயற்சி | பெண் ஒருவர் கைது | ஒருவர் தலைமறைவு |
ஆகஸ்ட் 12-2019
கரூரில் கடந்த 9 ஆம் தேதி பிரபல ஓட்டலின் மேலாளர் ஒருவருக்கு கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.
அதில் தான் கரூர் மாவட்ட ஆட்சியர் என கூறிய நபர்… கரூரில் விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டி அதற்காக ரூ.60 ஆயிரம் தனது உதவியாளரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டலின் மேலாளர் இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்… கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி ரங்கராஜ் நகரைச் சேர்ந்த ஜமாலுதீன் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் காக்காலூர் சக்தி நகரை சேர்ந்த ரீட்டா பாபியோலா ஆகியோர் தான் மேற்படி கரூர் மாவட்ட ஆட்சியர் போல பேசி மேலாளரிடம் செல்போனில் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவ்வழக்கில் குற்றவாளி ரீட்டா என்பவரை 11ஆம் தேதி போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜமாலுதீன் என்பவர் தலைமறைவாக உள்ளதால் தனிப்படை போலீசார் இவரை தேடி வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-நிருபர் ராம்