55 முறை திருடியவன் | 56 வது முறையில் சிக்கினான் |
ஜூலை 19-2019
சென்னையில் போலீசாரின் சிசிடிவி காமிராவில் சிக்காமல் இருக்க… மாடி விட்டு மாடி தாவிச்சென்று கொள்ளையில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் சிக்கி உள்ள முன்னாள் ஹாக்கி வீரர் ஹாரி பிலிப்ஸ் மைக்கேல்.
அபிராமபுரத்தில் உள்ள இரு வீடுகளில், கதவை உடைத்து, 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சிகளை பார்த்தபோது கொள்ளை நடந்த வீட்டிற்குள் எவரும் வந்து சென்றதற்கான காட்சிகள் ஏதும் சிக்கவில்லை..!
ஆனால் ஒரு சிசிடிவி காட்சியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 10 வீடுகள் கழித்து தூரத்தில் இருளில் ஒரு நபர் நடந்து செல்லும் காட்சி மட்டும் பதிவாகி இருந்தது. அதனை வைத்து அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஒரு சிசிடிவியில் கொள்ளையனின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து பல வருடங்களாக வீடுகளின் கதவை இரும்பு கம்பியால் உடைத்து கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையன் மைக்கேல் என்பது தெரியவர… அவனை சுற்றி வளைத்த போலீசார் அவனது இரு மனைவிகளிடம் இருந்தும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 10 சவரன் நகைகளை கைப்பற்றினர்.
மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்த மைக்கேல், படிப்பை முடித்த பின்னர் போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனால் இரு கைகளிலும் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாகி… வசதியான குடும்பத்தில் பிறந்த மைக்கேலின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் வெளி நாடுகளுக்கு சென்று விட்ட நிலையில், மைக்கேல் சென்னையிலேயே இருந்துள்ளார்.போதை பொருள் வாங்க 25 வருடங்களுக்கு முன்பு கே.கே. நகரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க துவங்கிய மைக்கேல், அசோக் நகர், தாம்பரம் , சேலையூர், என கைவரிசை காட்டிவிட்டு அடுத்தடுத்து பங்களா வீடுகளை கொண்ட மயிலாப்பூர் பகுதி வீடுகளை கொள்ளை அடித்ததும் இதுவரை 55 வீடுகளை உடைத்து கொள்ளையடித்ததும்.. அபிராமபுரத்தில் 56வது முறையாக கைவரிசை காட்டியபோது சிக்கியுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.. 55 வழக்குகளில் 30 வழக்குகளில் குற்றம் நிரூபிக்க படாததால் தண்டனையில் இருந்து தப்பிய மைக்கேலை 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். வீடுகளில் இருந்து நகை பணத்தை மட்டுமே திருடுவதை கொள்கையாக கொண்ட மைக்கேல், முதல் மனைவியிடம் கொஞ்சம் பணத்தையும் இரண்டாவது மனைவியிடம் நகைகளையும் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எப்போது போலீசில் சிக்கினாலும் தனது கை கால்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சி கேட்பது அவனது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது வரை ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட கொள்ளையன் மைக்கேல், சிறையில் இருந்து வெளியே வந்தால் அந்த பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து ஹாக்கி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் கொள்ளையில் ஈடுபட்டால் இரண்டு மாதங்கள் கழித்து தான் காவல் துறையினரால் கண்டறிய முடியும் என்றும், தற்போது ஊர் முழுக்க சிசிடிவி கேமரா வைத்திருப்பதால் விரைவாக கண்டு பிடித்து விடுகின்றனர் என்றும் ஆதங்கப்பட்ட மைக்கேல், சிசிடிவியே இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு மாடியாக தாவிச்சென்று ரிஸ்க் எடுத்து 10 வீடுகள் கழித்து கதவை உடைத்து கொள்ளை அடித்ததாகவும், அப்படி இருந்தும் போலீசில் சிக்கி கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மயிலாப்பூர் துணை ஆணையரின் உத்தரவின் பேரில் மைக்கேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்…
-நமது நிருபர்