60 லட்சம் கேட்டு கடத்திய குழந்தை 6 மணி நேரத்தில் மீட்பு | வேலைக்கார பெண் உட்பட ஒருவர் கைது |
ஜூலை 18-2019
சென்னை அமைந்தகரை, செனாய் நகர், செல்லம்மாள் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி நந்தினி. இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3.5 வயதில் அன்விகா என்ற மகள் உள்ளார். இவர் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வருகிறார். இவர்களின் வீட்டில் வேலை செய்து வந்தவர் அம்பிகா (39). இவர் இன்று மதியம் 3:30 மணியளவில் அன்விகாவை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். நந்தினி, அம்பிகாவிடம் மகளை விட்டுவிட்டு வேலை செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அம்பிகா மற்றும் தனது மகள் அன்விகா இருவரையும் காணவில்லை. வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள கடைக்கு சென்று இருப்பார்கள் என நினைத்து வெளியில் தேடிய போது, தனது மகள் உட்பட வேலைக்கார பெண் இருவரும் காணவில்லை என்ற பதட்டத்துடன் தேடிக்கொண்டு இருந்தபோது… சில மணி நேரத்தில் வேலைக்கார பெண்ணான அம்பிகா செல்போனில் இருந்து நந்தினிக்கு போன் வந்தது. அதில் பேசிய அம்பிகா தன்னையும், அன்விகாவையும் யாரோ கடத்தி சென்று விட்டார்கள். நாங்கள் எங்கு இருக்கிறோம் என தெரியவில்லை எங்களை காப்பாற்ற வேண்டும் என கூறிய நிலையில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் மேலும் பதட்டம் அடைந்த நந்தினி தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். அருள்ராஜ் வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து அதே செல்போனில் பேசிய மற்றொரு நபர் “இருவரையும் உயிரோடு விட வேண்டும் என்றால் ரூபாய் 60 லட்சம் பணம் தர வேண்டும்” என மிரட்டி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.
இதனால் மேலும் அச்சமடைந்த இருவரும் அமைந்தகரை காவல் நிலையத்தில் மகள் மற்றும் வேலைக்கார பெண் கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர். தகவல் அறிந்த இணை ஆணையர் விஜயகுமாரி அமைந்தகரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வேலைக்கார பெண் அம்பிகாவின் செல்போன் டவரை கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கில் அம்பிகா இங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில் வீட்டில் இருந்த மகள் மற்றும் வேலைக்கார பெண் எந்தவித சத்தமும் இல்லாமல் கடத்தப்பட்டுள்ளனர். உடனடியாக இரண்டு தனிப்படை அமைத்து பள்ளி சிறுமி மற்றும் அம்பிகா இருவரையும் மீட்க போலீசாரின் தேடுதல் வேட்டையை மிக தீவிரப்படுத்தியுள்ளனர்.
தீவிர தேடுதலில் 6 மணி நேரத்தில்… வேலைக்காரி அம்பிகா மற்றும் முகமது கலிபுல்லா சையத் என்ற இருவரும் சேர்ந்து குழந்தையை கடத்தி நாடகமாடியது கண்டுபிடிக்கப்படடு… இருவரும் கோவளத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிறிமி பத்திரமாக பெற்றொரிடம் ஒப்படைக்கப்பட்டால்.
-நமது நிருபர்