முதியவரின் நேர்மை | பணத்தை உரியவரிடம் சேர்ப்பதில் சிக்கல் |
முதியவரின் நேர்மை | பணத்தை உரியவரிடம் சேர்ப்பதில் சிக்கல் |
ஜூலை, 11, 2019 ,
ஏடிஎம் மையத்தில், முகம் தெரியாதவர் தவறவிட்ட பணத்தை,அவரிடமே சேர்க்க வேண்டும் என எண்ணிய முதியவரை, வங்கி நிர்வாகம் அலைக்கழித்ததோடு, அவரை மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (58). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த ஒன்றாம் தேதி, அயப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார். அப்போது அந்த ஏடிஎம் மெஷின் அருகே, ரூ.10- ஆயிரம் இருந்தது. இதனை எடுத்த ராமச்சந்திரன், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார். அந்த பணத்தை கேட்டு யாரும் வராததால் ஜெ.ஜெ. நகரில் உள்ள அந்த தனியார் வங்கிக்கு சென்று கிடைத்த பணம் குறித்து வங்கி மேலாளரிடம் அந்த பணத்தை கொடுத்தார்.
ஆனால், வங்கி மேலாளர், அந்த பணத்தை வாங்கிக் கொண்டு பணத்தை பெற்று கொண்டதாக எழுதி கொடுக்காமலும் உரிய பதிலும் கூறாமல் அலைக்கழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் வடபழனியில் உள்ள இந்த தனியார் வங்கி ஏடிஎம் நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது, அங்கேயும் அந்த பணத்தை பெற்றுக் கொள்ள வில்லை இது குறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் சுரேந்திரன் தொலைபேசி மூலமாக பேசியபோது, வங்கி நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வழக்கு பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார், அந்த பணத்தை ராமச்சந்திரனே வைத்துக் கொள்ளும் படியும், பணம் எடுத்த அன்று ஏ.டி.எம். மையத்தில் பணத்தை யார் தவறவிட்டார்கள் என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பிறகு அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
வாடிக்கையாளர் ஒருவர் தவற விட்ட பணத்தை உரியவரிடம் சேர்க்க முதியவர் போராடி வருகிறார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கியோ அந்த பணத்தை வாங்காமல் அலைக்கழிப்பு செய்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்…
-நிருபர் கோகுலன்