Sat. Dec 21st, 2024

ஏலச்சீட்டு நடத்தி மோசடி கணவன், மனைவி மீது | பாதிக்கப்பட்டவர்கள் புகார் |

ஏலச்சீட்டு நடத்தி மோசடி கணவன், மனைவி மீது | பாதிக்கப்பட்டவர்கள் புகார் |

ஜூலை, 10 , 2019
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர்புரம் வசந்தம்பார்க் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிலர், நேற்று காலை பெருந்துறை காவல் நிலையத்தில் புகார்.

எங்கள் பகுதியைச் சேர்ந்த, தீனதயாளபிரபு மற்றும் அவரது மனைவி நித்யா இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தாங்கள் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த பலரிடம், சீட்டுக்கான தொகையை பெற்று வந்தனர். மேலும், ஒவ்வொரு மாதமும் சீட்டு ஏலம் நித்யாவின் வீட்டிலேயே நடைபெறும் என்று கூறி வந்தனர்..

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, சீட்டில் ஏலம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. மேலும், இது பற்றிய விபரம் அறிய, அவர்களை போனில் எப்போது தொடர்பு கொண்டாலும், தாங்கள் வெளியில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும், அவர்களுடைய வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டோவில் ஏற்றிச் செல்வதாக அக்கம்பக்கத்தினர், எங்களுக்கு தகவல் தந்தார்கள். இதனால், நாங்கள் நேரில் சென்று பார்த்த போது, எங்களைப் போலவே நிறைய பேரிடம் இவர்கள் சீட்டு நடத்துவதாக கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும், சீட்டுக்காக என்று வசூலித்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைபட்டு ரேசன் கார்டு, ஆதார் அட்டை, காசோலை, ஆகியவற்றை அடகு பிடித்து 10-வட்டிக்கு விட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து தீனதயாளபிரபு, நித்யா தம்பதியிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டு தருமாறு கேட்டுள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட தம்பதி இருவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

-நிருபர் சண்முகசுந்தரம்