Sun. Oct 6th, 2024

235 கோடி மதிப்பீட்டில் புதிய துறைமுகங்கள் | 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

235 கோடி மதிப்பீட்டில் புதிய துறைமுகங்கள் | 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

மீன்வளத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்,235 கோடி ரூபாய் மதிப்பில்,புதிய துறைமுகங்கள் கட்டப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் , காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் கழிவேலியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில், மீன்பிடித் துறைமுகங்கள் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் . இந்த மீன்பிடி துறைமுகங்களில் , 250 இயந்திர படகுகளும், 1100 வெளிப் பொருத்தும் மோட்டார் கண்ணாடி நாரிழை படகுகளும் நிறுத்த இயலும் . இதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறைக்கப்படும்.

100 விசைப் படகுகள் மற்றும் 500 கண்ணாடி நாரிழைப் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக 150 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய மீன்பிடி துறைமுகம் ஆற்காட்டுத்துறையில் அமைக்கப்படும் . இதனால் , இப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 10,000 மீனவர்கள் பயன் பெறுவார்கள் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் , நாகூர் மீன்பிடி இறங்குதளம் அமைந்துள்ள வெட்டார் ஆற்றின் தெற்குப் பகுதியில், வண்டல் மண் படிவதைத் தடுத்திடவும் , மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் , படகுகளை சுலபமாக இயக்குவதற்கும் , வெட்டார் ஆற்றின் வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் . இதனால் 200க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப் படகுகளும் நாகூர் மீன்பிடி இறங்குதளத்தைப் பயன்படுத்த முடியும். இத்திட்டத்தால் மீனவர்கள் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கச் செல்ல முடியும் .

 தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் வட்டத்திலுள்ள பெரியதாழையில் , மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் , மீன்பிடி உடமைகளை கடலரிப்பில் இருந்து பாதுகாக்கவும் , வடக்கு கடற்கரையில் ஏற்படும் கடலரிப்பினை குறைத்திடும் வகையில் , இரண்டு சிறிய நேர்கல் சுவர்களை அமைத்து கடற்கரையினை பாதுகாத்திட அலை தடுப்புச்சுவர் கருங்கற்களாலும் மற்றும் கான்கிரீட் கற்களாலும் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சென்னை மீன்பிடி துறைமுகத்தில் 200 மெட்ரிக் டன் அளவில் மீன்கள் கையாளப்படுகிறது . சுமார் 30 , 000 பேர் தினமும் இத்துறைமுகத்தில் மீன்பிடி மற்றும் மீன் விற்பனைத் தொழிலில் ஈடுபடுகின்றனர் . இம்மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு , 10 கோடி ரூபாய் செலவில் துறைமுகத்தின் தென்பகுதியில் , சிறிய படகு அணையும் தளமும் , பெரிய படகு அணையும் தளமும் மற்றும் மீன் விற்பனை கூடமும் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

நமது நிருபர்